பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

தும்பைப்பூ

போலவே இனியும் இருக்க வேண்டும்; தல்லொழுக்கத்தை நிலை நாட்ட வேண்டும்' என்று அவர் தமக்குள் உறுதி செய்து கொண்டார். நாம் பொது வாழ்வில் பல பெண்களுடன் பழகக் கூடிய சந்தர்ப்பம் நேர்ந்த காலத்தும் காங்கிரஸில் சுதந்திரப் போராட்டக் காலங்களில் தேச சேவகிகளுடன் சேர்ந்து சேவை புரிந்து வந்த காலத்தும் நெஞ்சத்தாலும் நெறிதவறி நடந்ததில்லை. உடன் பிறந்த சகோதரிகளைப் போலவே பாவித்து சகஜமாகப் பழகி வந்திருக்கிறோம் என்ற நன்னிலை தானே, தேசத் தலைவர்களும் பொது மக்களும் நம்மிடம் தனிமதிப்புக் காட்டுவதற்குக் காரணமாயிருந்தது? அத்தகைய நேர்மையும் நல்லொழுக்கமும் நெருங்கிய உறவுடைய மங்கை விஷயத்தில் நழுவிப் போக விடுவதா? அதுவும் நாற்பது வயதுக்கு மேல் நெகிழ்வது நல்லதா? என்று தம்மைத் தாமே கேட்டுக் கொண்டார். தம் மனதில் சபலம் தட்டுவதற்குக் காரணமாயிருக்கும் மங்கையைக் கூடுமான வரை பார்க்காமலிருக்க வேண்டும்; தனியாகச் சந்திக்கக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படாதவாறு தவிர்க்கவேண்டும் என்று அவர் தீர்மானித்துக் கொண்டே தம் அறைக்குப் போய் சோபா வொன்றில் சாயந்தார்.

இங்கு மங்கையின் நிலையோ தரும சங்கடமாயிருந்தது. கோகிலா அவள் கண்களை அகல நீக்கி வாயினால் ஊதிவிட்டு, "இப்போ கண்ணை அறுக்கவில்லையே, சித்தி!" என்று கேட்டுக் கொண்டே, மீண்டும் திறந்து பார்த்தாள்.

மங்கை, "இல்லை" என்று சொல்வதற்குள் கோகிலா, "கண்ணில் ஒன்றுமில்லையே, சித்தி!" என்று கூறியவாறே கூர்த்து பார்த்தாள். இது மங்கையை மேலும் விதிர்ப்புற வைத்தது. "முந்தானையால் கசக்கியதால் தான் கண் சிவந்து போய்விட்டது" என்று அவள் கூறிய பிறகுதான் மங்கைக்கு மூச்சு வந்தது... "இரு சித்தி! கண்ணுக்கு ஒத்தடம் கொடுக்கிறேன்" என்று சொல்லி, கோகிலா தன் தாவணியின் முனனயப் பந்து போலாக்கி வாயில் வைத்து ஆவி பிடித்து மங்கையின் கண்களில் ஒத்தலானாள்.