பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

69

இதற்குள், திகைவதி, "மங்கை, மங்கை! எங்கே ஒன்றுமே சந்தடி காணோம்" என்று குரல் கொடுத்தாள். இது மங்கையை ஒரு கலக்கு கலக்கியது. அவள் ஏதோ சொல்வதற்குள், "என்ன செய்து கொண்டிருக்கிறாய், மங்கை..." என்று திலகவதி மீண்டும் குரல் கொடுத்து, "ஆமாம், மங்கை வந்தது யார்? அத்தான்தானே! - காபி கொடுத்தாயா?... பசங்க..." எனச் சொல்லிக் கொண்டிருக்கையில், "காபியெல்லாம் கொடுத்தாச்சு, குழந்தைங்ககூட வந்தாச்சு, இதோ வந்து விட்டேன்" என்று படபடப்புடன் கூறியவாறு கோகிலாவின் பிடியிலிருந்து போக முயன்றாள்.

"அத்தானுக்குச் செய்கிற உபசாரத்தில் என்னை அடியோடு மறந்து விட்டாயே, மங்கை! ஒரு மிடறு காபி கொடுக்கக் கூடாதா, எனக்கு?..." திலகவதி தமாஷாகச் சொல்லியதுகூட மங்கைக்கு விபரீதமாகப்பட்டது.

அவள் பதறிப் போய், "இதோ கொண்டு வருகிறேன், அக்கா, காபி! உங்களுக்குத்தான்..." என்று பேச்னச அரைகுறையாக நிறுத்திக் கொண்டே அடுக்களை நோக்கி வேகமாகப் போகலானாள்.

மங்கையின் பதட்டத்தைப் பார்த்து, கோகிலா, சில விநாடிகள் ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றாள்.

திலகவதியின் குரலைக் கேட்டதுமே, கணேசன் புத்தகங்களை ஒரு மூலையில் வீசியெறிந்துவிட்டு, "அம்மா பின்னாலே இருக்காங்களா?..." என்று கேட்டவாறே தாயை நோக்கியோடினான்.

"எங்கே போகிறாய், கணேசா! காபி குடித்து வீட்டுப் போ, இதோ அல்வா..." என்று கூப்பிட்ட மங்கை, அவன் ஒரே பாய்ச்சலில் பின்புறமாக ஓடுவதையும் பார்த்து, "கோகிலா, தம்பியைக் கூப்பிடு, நீயும் வந்து பலகாரம் சாப்பிடு..." என்று கூறியவாறு அவர்களுக்குப் பட்சணங்களை எடுத்து வைக்கலானாள்.