பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

71

சாக்கலேட் மாத்திரம் தரமாட்டா, கேட்டா, ‘அதை அடிக்கடி தின்னப்படாது. வயிற்றிலே பூச்சி பிடிக்கும்’ என்பாள்...பொல்லாதவள் அம்மா...”

“இரு; இரு. சித்தி வரட்டும்; சொல்கிறேன்...”

“சொல்லேன், பயமா?”...

“அப்படியானால் அவளைக் கூப்பிடட்டுமா? மங்கை!”...

அதேசமயம், தட்டில் பலகாரமும் டம்ளரில் காபியும் எடுத்துக்கொண்டு வந்த மங்கை. “இதோ வந்துவிட்டேன். அக்கா!...” என்று குரல் கொடுத்தவாறு அங்கு வந்து, “முன்னாலேயே கொண்டு வந்திருப்பேன்...” என்று சொல்லி வருகையில், “கூப்பிடாதே அம்மா, சித்தியை” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, வந்துவிட்ட மங்கையைப் பார்த்துத் திகைத்து நின்றிருந்த கணேசன், இதுதான் சமயமென்று, “ஆமாம்மா, சித்தி கண்ணிலே ஏதோ துரசு விழுந்துட்டுதாம். அப்பா துடைத்துக் கொண்டிருந்தார்.....” என்று குறுக்கிட்டுக் கூறினான்.

“என்ன?” என்ற கேள்வி திலகவதியின் அடிவயிற்றிலிருந்து எழுந்தது. அந்தத் தொனியில் ஒலித்த ஆங்காரத்தையுணர்ந்து மங்கை விதிர்விதிர்த்து விட்டாள்.

‘இல்லேம்மா, சித்தி கண்ணிலே விழுந்த தூசை அக்கா தான் ஊதி எடுத்திச்சு...’ என்று கணேசன் சொன்னான்.

“ஓ! அப்படியா!” என்று கேட்டுச் சிறிது தணிந்த திலகவதி “ஏன் மங்கை! நெருப்புப் பொறி பட்டுட்டுதா, என்ன?” என்று வினவி, “பார்த்து வேலை செய்யக்கூடாது?” என்று கூறி முடித்தாள்.

மங்கை ஏதோ சொல்ல வாயெடுத்தாள். இதற்குள் திலகவதி, “சரி, சரி! தட்டையும் தம்ளரையும் வைத்துவிட்டு அங்கே போய்க் கவனி. கணேசா, கூடப்போ...” என்று கூறினாள்.