பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சேரி விளையாட்டு


சிந்தை கவர் ஓவியங்கள்;
செயல் மிக்க சிற்பங்கள் ;
கந்தங் கமழுகின்ற
காமன்மகிழ் பள்ளியைறை;

நளபாகத் தறுசுவையில்
நல்ல நல்ல உண்டிவகை;
அளகா புரியது போல்
அளவற்ற செல்வங்கள்;

காலுக்குச் சோடு; நல்ல
காசி நகர்ப் பட்டுடைகள் :
மேலுக்குப் பொன்னணிகள்;
விதவிதமாய்ச் சுண்ணங்கள்;

இவை யெல்லாம் கற்பனைசெய்
தின்பமிகப் பெறுவாரோ?
இவை யனைத்தும் கற்பிக்க
எவ்வா றறிந்திடுவார்?

கனவுலகிற் காண்பதற்கும்
கருத்திலவை வேணுமன்றோ?
மனக் கோட்டை கட்டுதற்கும்
வகையறியா ஏழ்மையினர்!

இடிந்த சுவர் விழுகூரை
எறும்புவளை பழங் கஞ்சி
மடிந்த வால் பன்றியலால்
மற்றென்ன கண்டுள்ளார்?

21