பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூக்காரி


முல்லைப்பூ என்று சொல்லி
முல்லை நகை தான் மலர
மெல்லியலாள் அன்னம்போல்
வீதி வழி தானடந்தாள்.

சாயம் விட்ட பழஞ்சேலை
தையல் மிகக் காணுகின்ற
தேயும் முகிற் கந்தையிலே
சேர்ந்தசைந்தமின்போன்றாள்;

பூவுலகோர் பரவசமாய்ப்
புகழ்ந்தோதும் அஜந்தாவின்
ஓவியமாம் பெண்ணொருத்தி
உயிர்பெற்று வந்தது போல்

கக்கத்தில் சிறு கூடை
கையொன்றில் தானிடுக்கிப்
பக்கத்தில் ஒரு கையைப்
பாங்குடனே வீசி வந்தாள்;

நெற்றியிலே செம் பொட்டு,
நீள்விழியில் கவியமுதம்;
கற்றையிலே சேர்குழலாம்
காரிருளின் குடியிருப்பு;

30