பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 மேலே பற

மனமே, கற்பனைச் சிறகுகளை விரித்து வானிலே பற! மேமே மேலே பற! இன்னும் மேலே பற! விண்ணிலேயுள்ள அமுதத்தை மண்ணுக்குக் கொண்டுவா. வாழ்க்கையின் குறுகிய பாதையிலே உழன்று கீழ் நோக்கி நில்லாதே. உனது கனவுக் கண்களின் பரந்த நோக்கமே உலகத்தின் உய்வு. உனது பார்வை மேல் நோக்கியே விரியட்டும். நீல விசும்பிலே கழுகு பறக்கிறது; ஆனால் அதன் பார்வையெல்லாம் நிலத்திலே தான். கழுகுப் பார்வை உனக்கு வேண்டா. மேலே நிமிர்ந்து பார். கழுகாகிலும் வானிலே பறக்கிறது. மண்ணுக்குக் கீழே சேற்றிலே நெளிகிறது புழு, பார்வையெல்லாம் சேற்றிலே; , வாழ்க்கையேல்லாம் சேற்றிலே. நீ புழுவாகாதே; கழுகும் ஆகாதே. அப்பாலுக்கும் அப்பாலே உயர்ந்து செல். இன்பமெல்லாம் கொண்டுவா. எனக்கு எனக்கு என்று பேசாதே. எல்லாம் எல்லோருக்கும்- இன்பமே எண்ணுவாய்; அன்பே எண்ணுவாய். மனமே, கற்பனைச் சிறகுகளை விரித்து உயர்ந்து பற.

  மேலே மேலே உயர்ந்து பற.
            81