பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

இராஜாஜி உள்ளிட்ட பல மேதைகள் வாழ்த்துதல்களைத் தெரிவித்திருந்தார்கள்.

ம. பொ. சி. அவர்களின் வாழ்வே ஒரு தனிக்கதை. வறுமைக் குடியில் அவதரித்தார்; இல்லத்தையே பள்ளியாகக் கொண்டார்; அன்னையையே ஆசிரியையாக ஏற்றார். சமயக் குரவர்களின் பக்திப் பாடல்கள் இவரது உள்ளத்தைப் பண்படுத்தின. அச்சகத் தொழிலாளியாக அலுவல் பார்த்து வந்த இவரது செவிகளில், ‘சுதந்திரம் எனது பிறப்புரிமை’ என்னும் தாரக மந்திரத்தின் எதிரொலி கேட்டது. 1927ல் காங்கிரஸில் சேர்ந்தார். உப்புச் சத்தியாக்கிரகம், சட்டமறுப்பு இயக்கம், தனி நபர் சத்தியாக்கிரகம், ஆகஸ்ட் புரட்சி, அரிஜன இயக்கம், மதுக்கடை மறியல் போன்ற சகலவிதமான போராட்டக் கட்டங்களிலும் இரண்டறக் கலந்தார்; பலமுறை சிறைத் தண்டனையையும் அனுபவித்தார். ‘சான்றோர்களுடைய செல்வமே குணச்சிறப்புத்தான்’ என்று கூறுகிறதல்லவா தமிழ் மறை? இதற்கு ஓர் இலக்கணம் நம் அருமைத் தலைவர். ஒழுக்கம், அறிவு, ஆற்றல், ஆண்மை, தியாக உணர்வு போன்ற குண நலன்களுடன் திகழும் இவரை நம் தமிழ்த் தாய்த் திருநாட்டுக்குத் தந்த காலசக்திக்கு நாம் அஞ்சலி செலுத்த வேண்டும்.

1946, நவம்பர் 21ல் தமிழரசுக் கழகம் பிறந்தது.

ஞானத் தமிழ்மொழி ஞாலமெல்லாம் பரவி வளர
தொல்லை வினை தரு தொல்லையகன்று'

தமிழகம் சிறக்க-சிவஞானத் தமிழர் இயற்றிய தொண்டுகளை, எல்லைப் போராட்டம் தொட்டு நேற்று நடந்து முடிந்த தமிழ்நாடு பெயர்ப் போராட்டம் வரை நடைபெற்ற நிகழ்ச்சிக் குறிப்புக்கள் எப்பொழுதும் நினைவூட்டிக் கொண்டே யிருக்கு மன்றோ!