பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73

ஆகவே, இம்மொழிகள் நம் தாய்த் திருநாட்டுக்கும் ஒட்டி வருவது இயல்பு : பொருத்தம்.

தேமதுரத் தமிழ்மொழி ஆட்சிமொழியாகக் கைக் கொள்ளப்பட்டது; செயல் வடிவில் படிப்படியாக முன்னேற்றமும் முற்போக்கும் தெளிவும் கொண்டு இலங்கி வருவதையும் நாம் கண்டு தெளிந்து வருகின்றோம்.

ஆனால் கல்லூரிகளிலே, தமிழே போதனா மொழியாக இயக்கப்பெற வேண்டும் என்று ‘ஒருமனப்பட்ட குரல்’ அண்மைக் காலத்தில் தமிழ்கூறு நல்லுலகெங்கும் முழக்கம் செய்து வருகிறது.

பல்கலைக் கழக உயர்மட்டத் தலைமைப்பீடம் முழு மூச்சோடு எதிர்த்தது.

நமது மாநிலக் கல்வி அமைச்சர் மனத்திண்மை பெற்றவர்; இத்தகைய பக்குவத்திற்கு முதற்காரணம், அன்னாரது தமிழார்வமேயாகும். ஆகவே, அவர், எதிர்த்து வந்த எதிர்ப்புக்களை துச்சமென - மதித்தார். கோவை அரசினர் கல்லூரியில் போதனா மொழியாக, அமுதத்தமிழ் அங்கம் வகித்தது. சோதனையாக எடுத்துக் கொண்ட செயல்முறைத் திட்டத்தின் வெற்றியைக் கண்டு நாம் அகமகிழ்ந்தோம். இது தெய்வத் தமிழன்னையின் வெற்றி!

கோவையில் நடந்த சர்வகட்சிக் கூட்டமொன்றில் கல்வி அமைச்சர் பேசுகையில், “தமிழை ஆட்சிமொழியாகவும், போதனா மொழியாகவும் ஆக்க, தமிழ்நாடு அரசு செய்திருக்கும் இம்முடிவு இருதியானது. இவ்விஷயத்தில் தமிழ் நாடு அமைச்சரவையின் கருத்து ஏகமனதாக் இருக்கிறது,” என்று குறித்தார். கல்வி அமைச்சர் திரு சி. சுப்பிரமணியம் அவர்களைத் தமிழகம் இதயபூர்வமாகப் பாராட்டும்.