உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 செவ்வரளியின் நரம்புகள் இருவர் கண்களிலும் பரவிப் பரந்திட வாழ்விலோர் திருநாள் இந்த வசந்தப் பெருநாள் என வைரமுத்தனும் கல்யாணியும் வைகறைப் பொழுது வரையில் உறக்கத்தை விரட்டியடித்துக் கொண்டே, உலகமென ஒன்றுண்டு என்பதை மறந்தே இருந்தனர். நாளைக்கு உலகம் இருக்குமோ இருக்காதோ என்ற சந்தேகத்தின் காரணமாக இன்றைக்கே எல்லையற்ற எண்ணற்ற இன்பங்களை அனுபவித்தனர். கண்ணகியும் கோவலனுமென்ற சிலப்பதிகாரக் கற்பனைக்கு எடுத்துக் காட்டாக அவர்கள் இன்பம் துய்த்தனர். கண்களும் உடலும் கெஞ்சிய பிறகே அவற்றின் முறையீட்டை மதித்து விடியலின்போது ஓய்வு வழங்கினர். இதற்கிடையே வீரம்மாள். கறுத்த ஆதப்பனைப் பாகனேரிக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை மிகத் தந்திரமாகவும், விறுவிறுப்பாகவும் கவனித்தாள். முரண்டு பிடிக்காத ஒரு குதிரையைக் கொண்டு வரச் சொல்லி, அதில் அவனை ஏற்றிவிட்டு, அவன் அரண்மனைப் பகுதியைக் கடந்து செல்லும் வரையில் அங்கேயே நின்று கொண்டிருந்துவிட்டு. ஒரு நல்ல காரியத்தைச் செய்து முடித்த ஆறுதல் நிரம்பிய பெருமூச்சுடன் தனது அறைக்கு வந்தாள்.