பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ү முதலாவதாக உள்ள 'தெள்ளாற்று நந்தி' என்ற நாடகமும் இடைக்காலத் தமிழ் நூல்களுள் சிறந்த ஒன்றாகிய நந்திக் கலம்பகத்தை அடிப்படையாகக் கொண்டு தோன்றிய கற்பனை நாடகமாகும். நந்திக் கலம்பகம் சிறந்ததொரு தமிழ் இலக்கியம் என்பதும் அதிலுள்ள பல பாடல்கள், அறம் வைத்துப் பாடப் பெற்றுள்ளனவென்பதும் பலரும் அறிந்த ஒன்றாகும். இந் நூல் தோன்றியதன் காரணம் கர்ணபரம்பரைக் கதையாக வழங்குவதன்றி வேறொன்றுமில்லை. சிவஞான முனிவர், "நந்தி, கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும்” என்று சோமேசர் முதுமொழி வெண்பாவில் கூறியுள்ளது தவிர, வேறு வரலாற்றுப்பூர்வமான ஆதாரம் ஒன்றுமில்லை. எனவே, எவ்வாற்றானும் தமிழை வளர்க்க வேண்டுமென்ற உறுதி பூண்ட மன்னனாக நந்தித் தொண்டைமானைக் கற்பனை செய்து இந் நாடகம் ஆக்கப்பெற்றுள்ளது. ‘புதுமைப்பித்தன்' அவர்களுடைய சாவா வரம் பெற்ற படைப்புகளுள் சாப விமோசனம் என்ற சிறு கதையும் ஒன்றாகும். அக் கதையில் ஈடுபட்ட இவ்வாசிரியன் அதனை நாடகமாக ஆக்கி ஒலிபரப்ப வேண்டுமென்ற விருப்பத்துடன், திருமதி புதுமைப் பித்தனை அணுகியபோது அவர் மிக விருப்பத் தோடு ஒப்புதல் தந்தார். பழைய அகலிகைக் கதையாயினும் மானிட உணர்ச்சிகள் எந்தெந்தக் கோணங்களில் போராட முடியுமென்ற மனோதத்துவ அடிப்படையைக்கொண்டு அற்புதமாக இதனைப் படைத்துள்ளார் புதுமைப்பித்தன் அவர்கள். அதையே நாடகமாக ஆக்கி, அவர் சூட்டிய அதே பெயருடன் அளித்துள்ளான் ஆசிரியன். இதற்காக மறுமுறையும் திருமதி புதுமைப் பித்தன் அவர்களுக்கு இவ்வாசிரியனின் நன்றி உரித்தாகும்.