பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 தேசீய இலக்கியம் முற்றிலும் அடியொற்றிச் சென்றதனாலேயே சேக்கிழார் நாட்டுச் சிறப்பு, நகரச் சிறப்பு முதலியன கூறினார் என்பதும் பொருத்தமாக இல்லை. அவ்வாறு அவர் கூறியிருப்பாராயின் காப்பியத் தலைவராகிய சுந்தரமூர்த்திகள் தோன்றிய திருமுனைப்பாடி நாட்டையும், திருநாவலூரையும் அன்றோ பாடி இருத்தல்வேண்டும்? அவ்வாறு செய்யாமல் சோழ நாட்டுச் சிறப்பையும் அதன் தலைநகராக இருந்த திருவாரூர்ச் சிறப்பையும் அன்றோ பாட எடுத்துக்கொள்கிறார்? இதனால் ஒன்று தெளிவாகும். அதாவது முறைவைப்பை மட்டும் சிந்தாமணியிலிருந்து எடுத்துக்கொண்ட சேக்கிழார் உட் பொருளில் மாறுபடுகிறார். சீவகனுடைய நாடு, நகரம்பற்றித் தேவர் வருணித்தார். ஆனால், சேக்கிழார் காப்பியத் தலைவராகிய சுந்தரருடைய நாடு, பிறந்த நகரம் என்பதைக் கூறாமல் சோழர் பெருமையைக் கூறும் வகையில் சோணாட்டை வருணிக்கிறார், இவற்றிலிருந்து ஓர் உண்மை நன்கு வெளிப்படும். சிந்தாமணியைப்போலக் காப்பியம் புனைய வேண்டும் என்று தொடங்கிய சேக்கிழார், தம் காப்பியம் ஒரு புதிய முறையில் செல்லவேண்டும் என்பதையும் முடிவு செய்துகொண்டார். தமக்கு முன்னர் யாரும் இத்தகைய முறையில் செல்லாமை யின், தாம் பல புதுமைகளை இதன் கண் நுழைக்கின்றார். அவற்றுள் சிறந்த இரண்டு திருமலைச் சிறப்பும், திருக்கூட்டச் சிறப்பும் ஆம். இவை இரண்டையும் கூறவேண்டிய காரணம் என்ன? காப்பிய இலக்கணம் பேசும் பிற்கால இலக்கணங்கள் இவை பற்றி ஒன்றும் கூறவில்லை. முன்னும் பின்னும் தோன்றிய காப்பியங்களும் இவ்வாறு கூறவில்லை. பின்னர் ஏன் சேக்கிழார் இவற்றைப் புதிய முறையில் நுழைக்க வேண்டும்? அதுவே அவருடைய சிறந்த புலமைக்கு எடுத்துக்காட்டாகிறது. இவ்வளவு துன்பம் நிறைந்த கதையை ஏன் சேக்கிழார் எடுத்துக்கொள்ளல் வேண்டும்? அப்படிக் கொண்டவர், அக்கதைகளை உதிரிப் பாடல்கள் நிறைந்த ஒரு புராண