பக்கம்:தேன் சிட்டு.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10
தேன் சிட்டு

இருந்தாலும் என் உள்ளம் தேன் சிட்டின் இன்பப் பணியையே பெரிதாக மதிக்கிறது. கொன்று செய்கின்ற தொண்டைவிடத் துன்பங்கலவாத இன்பத் தொண்டைச் செய்வது மேல்.

இரண்டும் தேவைதான் என்று பலர் வாதிக்கலாம். அவ்வாறு வாதிக்க அவர்களுக்கு நல்ல ஆதாரங்களும் இருக்கலாம். "கீதையிலே கண்ணன் நமக்கு எடுத்துக்காட்டும் உண்மையை மறுக்க முடியாது” என்றும் சிலர் தலை நிமிர்ந்து பேசலாம்.

நான் அவர்களோடு வாதாட வரவில்லை. எனக்கு எது பிடித்திருக்கிறது என்று கூறவே இங்கு விரும்புகிறேன்.

சுவை என்பது விநோதமானது. நாக்கின் சுவையும் அப்படித்தான். ஒருவனுக்குப் பிடிப்பது மற்றொருவனுக்கு அதே அளவில் பிடிக்குமென்பதில்லை. மாம்பழத்தின் சுவையையே நாடுவோர் உண்டு. சிலருக்கு மாம்பழம் அலுத்துப் போகும்; ஆனால் மிளகாய்ப்பழத்தின் சுவை என்றும் அலுக்காது. அது போலத் தேன் சுவையைவிடப் புழுவின் ஊன் சுவை மைனாவுக்குப் பெரிதும் உகந்ததாக இருக்கலாம். நான் அதைப்பற்றி ஆராய முயலவில்லை. ஆனால் செடி கொடிகளுக்கு அது செய்யும் சேவை துன்பங் கலந்ததாயிருப்பதால் அது தேன் சிட்டின் சேவையைப்போல அவ்வளவு என் உள்ளத்தைக் கவரவில்லை என்பதைக் கூறிக்கொள்ளவே விரும்புகிறேன்.