பக்கம்:தேன் சிட்டு.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காலச் சக்கரம்

 காலச் சக்கரம் சுழல்கிறது. ஓயாத சுழற்சி ஓயாத முன்னேற்றம். சக்கரம் உருண்டுகொண்டே இருக்கிறது.

காலச் சக்கரம் என்று சுழல ஆரம்பித்தது: எங்கே தொடங்கியது? எங்கே, எப்பொழுது நிற்க போகிறது?-யாரும் திட்டமாகக் கூற முடியாது.

என்றே அது உருண்டோட ஆரம்பித்தது: எங்கேயோ அது தனது பயணத்தைத் தொடங்கியது; போய்க்கொண்டே இருக்கிறது. ஒய்வில்லை: தயக்கமில்லை; உறக்கமில்லை; பின்நோக்கிப் பார்ப்பு தில்லை; ஒரே சீரான ஒட்டம்; ஒரே திசையை நோக்கிப் பிரயாணம்.

காலச் சக்கரத்திற்குப் பின்னோட்டமில்லை; முன்னோட்டமே உண்டு. பின்னோட்டத்தை அது பழக வில்லை. அதை அதற்குப் பழக்குவோரும் இல்லையோ?

எண்ணெய் ஆட்டும் செக்கிலே பூட்டிய மாடு சுற்றிச் சுற்றி ஒரே வட்டத்தில் சுழன்று வந்து கொண்டிருக்கிறது. கிணற்றிலே தண்ணீர் இறைப் பதற்குக் கமலையிலே பூட்டிய மாடு முன்னும் பின்னுமாக ஒரே இடத்தில் போய்க்கொண்டிருக்கிறது. காலச் சக்கரத்தின் போக்கு இவைகளைப் போல் அல்ல. அது முன்னேறிக்கொண்டே இருக்கிறது. ஒரு முறை அடியெடுத்து வைத்த பாதையை அது மறுபடியும் கண்ணெடுத்துப் பார்ப்பதே இல்லை.