பக்கம்:தேன் சிட்டு.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
56
தேன் சிட்டு

இந்த எண்ணங்களெல்லாம் அன்று செய்தித்தாளைப் பார்க்கின்றபோது என் உள்ளத்திலே மின்ன விட்டன. அதனால் எனக்கு வீட்டிலே அடைபட்டு கிடைக்க பிடிக்கவில்லை. அவசரம் அவசரமாகக் காலை உணவை முடித்துக்கொண்டு மீண்டும் வெளியே சென்றேன்.

சாமந்திச் செடிகளுக்கு இன்னும் தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தது; ஒரு பாத்திக்கு மடையை மாறித் தண்ணீர் போகுமாறு செய்துவிட்டுத் தோட்டக்காரன் வரப்பிலே அமர்ந்திருந்தான். அவன் மனைவி ஒரு மண்கலயத்திலே பழைய சோறு கொண்டுவந்திருந்தாள். அவள் அதைக் கரைத்துத் தோட்டக்காரன் கைகளிலே ஊற்றினாள். மாங்காய் ஊறுகாயைக் கடித்துக்கொண்டு அவன் மகிழ்ச்சி யோடு சோற்றைக் குடித்துக்கொண்டிருந்தான். ஆட்டுக்குட்டி துள்ளிக் குதிப்பதை நிறுத்திவிட்டு வரப்பிலே வளர்ந்திருந்த அறுகம்புல்லை விளையாட்டாகக் கடித்துக்கொண்டிருந்தது. தண்ணீர் பாய்ந்த பாத்திகளிலுள்ள சாமந்தி மலர்கள் எழிலோடு காட்சியளித்தன.

"தோட்டக்காரா, இன்னும் வேலை முடிய வில்லையா?” என்று நான் அவனை நோக்கி நடந்து கொண்டே கேட்டேன்.

அவன் சோறு குடித்துவிட்டுக் கையலம்பிக் கொண்டிருந்தான்.

"இதற்குள்ளே முடியுங்களா? தண்ணீர் கட்டி முடிய உச்சிப் பொழுதாகும்" என்றான் அவன்,