பக்கம்:தேவநேயம் 1.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

154 தேவநேயம் அதிகாரிகளின் அமாத்தம் என்னும் பகுதிகள், முதலமைச்சன் அரசியலில் எவ்வளவு தனிப் பொறுப்பும் அதிகாரமும் வாய்ந்தவன் என்பதை உணர்த்தும். உயர்குடிப் பிறப்பும், ஒழுக்கமும், மதிநுட்பமும், இலக்கண விலக்கியப் பயிற்சியுடன் அரசியல் நூலில் சிறந்த புலமையும், சூழ்ச்சித் திறனும், நெஞ்சுரனும், அரசியல் வினைத்திட்பமும், அரசனது குறிப்பறிந்தொழுகு மாற்றலும், அரசன் சிறப்பாக நுகரும் பொருளை விரும்பாவியல்பும், அரசனிடத்துங் குடிக ளிடத்தும் அன்பும், எவ்வகையினும் அறைபோகா உள்ளமும், அற வுணர்ச்சியும், சொல்வன்மையும், தோற்றப் பொலிவும் மகப் பேற் றுடன் சுற்றமும் உடையவனே, முதலமைச்சனாக அமர்த்தப் பெறுவன். முதலமைச்சனுக்கு அடுத்தபடியாய் அரசியற் பொறுப்பு வாய்ந்தவன் தலைமைப் படைத்தலைவன். இவ்விருவரும் ஒரு நாட்டிற்கு இருபெருந் தூண்களாவர். ஏற்கெனவே துணையமைச்சனாயும் துணைப்படைத் தலைவனாயும் ஊழியம் செய்து உண்மை காணப்பட்டவரே, பின்னர் முறையே தலைமையமைச்சனாகவும் தலைமைப் படைத் தலைவனாகவும் அமர்த்தப் பெறுவர். தலைமையமைச்சனாகவோ தலைமைப் படைத்தலைவனாகவோ ஒருவனை யமர்த்துமுன், அவனிடத்து அரசன் மாட்டன்பும் அரசவின்பம் விரும்பா வியல்பும் அறை போகா நெஞ்சும் உளவா வென்றறிதற்கு, அவனை அறம் பொருள் இன்பம் உயிரச்சம் என்னும் நால்வகை நோட்டஞ் செய்து, அவற்றில் அவன் தேறப்படின் அமர்த்துவதும் தவறின் நீக்குவதும், அரசர் வழக்கம். அறநோட்டமாவது, அரசனால் விடுக்கப்பட்ட அறவோர் சென்று, “இவ்வரசன் அறவோனன்மையின், இவனை நீக்கிவிட்டு அறவோனான ஒருவனை அரசனாக்கத் தீர்மானித்துள்ளோம். உன் கருத்து யாது?” என்று தாமே வினவுவதுபோல் வினவி, அவன் கருத்தைச் சூளுறவோடு சொல்வித்தல். பொருள் நோட்டமாவது, அரசனால் விடுக்கப்பட்ட படைத் தலைவர் சென்று, "இவ்வரசன் இவறி (உலோபி) யாதலின், இவனை நீக்கிவிட்டுக் கொடையாளியான ஒருவனை அரசனாக்கத் தீர்மானித்துள்ளோம். உன் கருத்து யாது?” என்று தாமே வினவுவது போல் வினவி, அவன் கருத்தைச் சூளுறவோடு சொல்வித்தல், இன்ப நோட்டமாவது, அரசனுடைய தேவிமாருடன் நெருங்கிப் பயின்ற ஒரு தவமுதியாளை அரசன் விடுக்க அவள் சென்று, “இன்ன தேவி உன்னைக் காதலிக்கின்றாள். உன் கருத்து யாது? என்று தானே வினவுவதுபோல் வினவி, அவன் கருத்தைச் சூளுறவோடு சொல்வித்தல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/181&oldid=1431676" இலிருந்து மீள்விக்கப்பட்டது