பக்கம்:தேவநேயம் 1.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவணர் - உருவாக்கம்

பாவணர்

5



ஒட்டு மொத்தமாக வெளியிடத் திட்டம் மேற்கொண்டது. நூல் வடிவுற்றவற்றை அன்றிக் கட்டுரை-பொழிவு-துண்டு வெளியீடு - இதழ் வெளியீடு - என்பனவற்றையும் முன்வெளியீட்டுத் திட்டம் உருவாக்கி வெளியிட்டது.
சென்னையில் 01.12.2001 இல் நூல் வெளியீட்டு விழாப் பொழிவுக்கெனச் சென்ற காலை, சிங்கபுரி செந்தமிழ்க்காவலர் கோவலங்கண்ணனாரைக் கண்டேம். எம் குண்டலகேசி வெளியீட்டுப் புரவலர் அவர். நெட்ட நெடுந் தொடர்பினர். மலையகச் சுற்றுலாவில் உடனாகிச் சிங்கைச் சுற்றுலாவில் புரவாண்மை மேற்கொண்டவர். அவர்க்கும் எமக்கும் ஊடகம் எது? இருவர்க்கும் உயிர்ப்பாகி விட்ட தேவநேயக் காதலேயாம்!
விழாவுக்கு முதல் நாள் இரவு கோவலங்கண்ணனார் தாம் தங்கியிருந்த மாளிகைக்கு அழைத்தார். இனிய அன்பர் பாவாணர் தமிழியக்கச் செயலர் - முனைவர் கு. திருமாறனார் உடனாகச் சென்று, உரையாடியும் உறைந்தும் மகிழ்ந்தோம்.
உரையாட்டின்போது, தேவநேயத் தொகை குறித்த எம் உள்ளார்ந்த வேட்கையை, எந்த எதிர்பார்ப்புமின்றிச் செய்தியளவில் வெளியிடக், கோவலங்கண்ணனார் உள்ளப் பளிச்சிடு முகத்தில் பொலியப் "பாவாணர் அறக்கட்டளை" ஒன்று தொடங்குவோம். அதன் வழியாகத் "தேவநேயம்" வெளியிடுவோம். அமைப்புப் பொறுப்பும், அறக்கொடைப் பொறுப்பும் முழுவதாக ஏற்றுக்கொள்வேம்; எவர் எவரைத் தக்காராகத் தாங்கள் கருதுகிறீர்களோ அவர்களைக் குழுவில் இணைக்கலாம்; தொகுப்புக்குப் பயன்படுத்தலாம்; தொகுப்பை முடித்ததும் வெளியீட்டுப் பொறுப்பை முற்றாகப் "பாவாணர் அறக்கட்டளை" ஏற்றுக் கொள்ளும். அதன் மேலும், மொழி இன ஆக்கப் பணிகளுக்கு அறக்கட்டளை வேண்டுவ புரியும்" எனச் சில மணித்துளிகளில், தேன்மழைப் பொழிவெனப் பொழிந்தார்.
மெய்யாகவே அவரியல்பை அறிந்திருந்த எமக்கும் "எடுத்த எடுப்பிலே பல இலக்கப் பணிப்பொறுப்பை இப்படி எவரே ஏற்று மொழிவர்?" என்னும் வியப்பே கிளர்ந்தது. அன்று இரவு முகிழ்த்த பாவாணர் அறக்கட்டளை, விடியலிலேயே, 'அறக்கட்டளை முன்வைப்பாக' முளைத்தது. அந்நாள் 01.12.2001.
"2002 சனவரித் திங்கள் பணியைத் தொடங்கி 2003 திசம்பர்த் திங்கள் இறுதிக்குள் நிறைவு செய்தல்" என்னும் உறுதியுடன் கிளர்ந்த பணி, “நாளை” என்பது, தள்ளிப்போடும் தடை 'இன்னே' என்பதே என்றும் வேண்டுவது என்னும் தெளிவால் 02.12.2001 ஆம் நாளே, 'தேவநேயப் பணித் திட்டம்', 'திட்டமுறை'யோடு தொடங்கப்பட்டது. திருவள்ளுவர் தவச்சாலையே பணிக்களமும் ஆயது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/22&oldid=1481006" இலிருந்து மீள்விக்கப்பட்டது