பக்கம்:தேவநேயம் 1.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

தேவநேயம்

தேவநேயம்



தவச்சாலையின் நூலகம், பாவாணர் ஆராய்ச்சி நூலகம் என்பது. பாவாணர் பெரும்பிரிவுற்ற அணிமை நாளிலேயே, அவர் பெயரால் மதுரைத் திருநகரில் உருவாயது. அதன் முன்னரே ஏழாயிரத்திற்கு மேற்பட்ட நூல்களைக் கொண்டிருந்தது. இல்லத்திலே இருந்த நூலகம் இடம் பெயர்ந்து தமிழ்ச் செல்வப் பெயருடன் பாவாணர் ஆராய்ச்சி நூலகமாக மாடிக் கட்டடத்துடன் ஆய்வுக்களமாகத் திகழ்ந்தது. 1994இல் யாம் காவிரித் தென்கரையில் திருவள்ளுவர் தவச்சாலை உருவாக்கிய நிலையில் அப்பெயருடன் நூலகமும் எய்தியது.
அக்காலத்திருந்த நூல்களின் எண்ணிக்கை இரட்டிப்பு ஆகிய வளர்வில் ஆய்வுப்பயன் செய்கின்றது. ஆதலால், பாவாணர் அறிவுக்கொடை என்பவை எல்லாமும் ஒருங்கே ஆய்வுப் பொருளாக அமைந்து சிறக்கும் இடத்தில், தேவநேய அடைவுப் பணி செய்தல் அருமையை, எளிமைப்படுத்திவிட்ட பெருமையதாம். ஏன்? நூலுக்கெனத் தேடியோட வேண்டுவதில்லையே!
பாவாணர் தொடர்புடைய இதழ்கள்-மலர்கள் இயல்பாகவே இருந்தன. பிறருக்கு வாய்க்காத எழுத்துப் படிகள் அருநூல்கள் சில இருந்தன. செந்தமிழ்ச் செல்வி முற்றாக உண்டு. பாவாணர் வரைந்த கடிதம்-படிகள்- ஈராயிரத்திற்கு மேல் அவர்தம் வரலாற்றுக்காகத் தொகுக்கப்பட்டவை கைவயமிருந்தன. இன்னவை எல்லாம் இத்தொகைக்கு உதவின.
இவற்றுக்கு மேலே, மேலும் ஓர் அரிய வாய்ப்புத் தேடி வந்தது. தமிழ்மண் பதிப்பகம், பாவாணர் கட்டுரைகளென வெளிப்பட்டவற்றையெல்லாம் அரிதின் முயன்று பல்வேறு அடைவுகளில் நூலாக்கம் செய்து தமிழுலகம் கூட்டுண்ண வெளியிட்டது. அதனால், அதன்முன் கிட்டாத சில மலர்கள் - இதழ்கள்தாங்கிய கட்டுரைகளும் வாய்த்தன.
இவ்வகையால் இடையறவின்றி இத்தொகையாக்கம் நடைபெறுவதாயிற்று.
புலவர் இரா. இளங்குமரன், முனைவர் கு. திருமாறன், முனை வர் கு. பூங்காவனம், புலவர் மு. படிக்கராமு, முனைவர் ப. கங்கை என்பாரை அடைவுப் பணியாளராகக் கொண்டு திங்கள் மதிப்பூதியமாக ஒவ்வொருவருக்கும் ஈராயிரம் வழங்குவது என முதற்கண் திட்டப்படுத்தப்பட்டது. பின்னர்ப் பணியை மேலும் சிலர் வழியே செய்யப்பெறின் விரைந்து இயல வாய்க்குமெனக் கொண்டோம்.
அதனால் தக்கார் சிலரை இக்குழுவில் மேலும் இணைத்துக் கொள்வதென முடிவு செய்தோம். முன்னே தீர்மானித்தவர்களுடன் முனைவர் திருஞானம், முனைவர்.சக்திவேல், முனைவர். நாராயணன், புலவர் தமிழகன், புலவர் குறளன்பன், பாவலர் மு.வ. பரமசிவம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/23&oldid=1481008" இலிருந்து மீள்விக்கப்பட்டது