பக்கம்:தேவநேயம் 1.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அரசர் வாழ்வில்..... பாவாணர் 215 அரசர் வாழ்வில் அன்றாட நிகழ்ச்சி அரசர் வாழ்க்கையில் அன்றாட நிகழ்ச்சிகள் பொதுவாகப் பின்வருமாறு நிகழ்ந்துவந்தன. வைகறையில், அகவர் (சூதர்) அரசனின் பள்ளி மாடத்திற்கு வெளியே வாயிலருகு நின்று, அவன் முன்னோரின் புகழை இனிதாகப் பாடி அவனைத் துயிலுணர்த்துவர். அரசன் துயிலுணர்ந்து, அன்று செய்ய வேண்டியவற்றைச் சிந்தித்துப் புலரும் வேளையிற் பள்ளிவிட்டெழுவன். அவன் எழுந்தமைக் கறிகுறியாகக் காலை முரசம் என்னும் பள்ளியெழுச்சி முரசம் அடிக்கப்பெறும். அரசன் எழுந்தபின், படைக்கலப் பயிற்சியிருப்பின் அதைச் செய்துவிட்டுக் காலைக்கடன்களை முடித்து, நீராடி இறைவழிபாடு முற்றிக் காலையுணவுண்டு, ஓலக்க மண்டபத்திற்குச் செல்வன். அங்குக் கொடை முரசு அடிக்கப்படும், பல்வேறிடத்தினின்றும் வந்திருக்கும் புலவர் பாணர் கூத்தர் முதலிய பரிசிலர், பாடியும் ஆடியும் தத்தம் திறமைகாட்டி, அதற்குத் தக அரசனிடம் பரிசு பெறுவர். கொடை நிகழ்த்தி முடிந்தவுடன், முறைமுரசு அடிக்கப்படும். வழக்காளிகள் தத்தம் வழக்கைச் சொல்வதற்கு முன்னே வந்திருப்பர். முரசடித்தவுடன் வழக்குக் கேட்கை தொடங்கும். அரசன் ஓலக்கமண்டபத்திலிருந்து கொடை நிகழ்த்தி முடிந்தபின், அவ்வக்கால வினைநிலைமைக்கேற்பச் சூழ்வினை மண்டபத்திற் கேனும் அற மன்றத்திற்கேனும் செல்லினும் செல்லலாம்; அன்றி ஓலக்கமண்டபத்திலேயே இருந்து தன்னாட்டெழுத்துப் போக்குவரத்தையும் அயல்நாட்டெழுத்துப் போக்குவரத்தையும் கவனிப்பினும் கவனிக்கலாம். இவ் வினைகளெல்லாம் முற்பகல் நிகழ்ச்சிகளாகும். நண்பகலில் அரசன் உணவுண்டபின், இரண்டொரு நாழிகை அல்லது வெயில் தணியும்வரை, இளைப்பாறலாம். அதன்பின் மீண்டும் ஓலக்கமண்டபம் சென்று சிறிது நேரம் அரசியற் காரியங்களைக் கவனிக்கலாம். பிற்பகல் நிகழ்ச்சிகள் பொதுவாக, அரசர்க்குக் குடும்பக்காரியக் கவனிப்பாகவும் இன்பப் பொழுதுபோக்காகவுமே யிருக்கும். இராவுணவு உண்டபின், சிறிதுநேரம் உரையாடியிருந்து, ஊரடங்கும் வேளையில் அரசன் பள்ளிகொள்வன். பள்ளி மாடத் திற்குப் பள்ளிமண்டபம் பள்ளியம்பலம் என்றும் பெயருண்டு. கார்காலத்திலும், போர்க்காலத்திலும், விழாநாளிலும், நாடு காவற் சுற்றுப்போக்கு நாட்களிலும், பிற சிறப்பு வினை நிகழ்ச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/232&oldid=1431801" இலிருந்து மீள்விக்கப்பட்டது