பக்கம்:தேவநேயம் 1.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

2701 தேவநேயம் அறமும் கொடையும் பதினறுவர், திருவாமாத்தூர்க் கோயிலில் தேவாரப்பாடகராக அமர்த்தப் பெற்றிருந்தனர். இங்ஙனம் சில எச்சப் பிறவியர்க்கு வாழ்க்கை வசதி செய்யப்பட்டிருந்தது. சிறுவர், மெலியார், தூயர் முதலியோரைக் கொல்லாமையும்; பொருநிலையற்றவன், தோற்றோடுபவன், முதலியோரொடு பொராமையும்; அடைக்கலம் புகுந்தவனைக் கைவிடாமையும்; போரறங்களாகப் பெரும்பாலும் கடைப்பிடிக்கப்பட்டன. பண்டைத் தமிழரசர், தம் நாட்டை அல்லது குடிகளை ஆளும் தொழிலை ஆட்சி என்னுஞ் சொல்லாற் குறியாது, காவல் புரவு ஓம்பல் முதலிய சொற்களாலேயே குறிக்க விரும்பினர். அவர் காவல் பூண்ட இடம், குடை நிழல் என்றும் அடிநிழல் என்றும், குறிக்கப்பட்டது. நெடுஞ்செழியன் குற்றமற்ற கோவலனைக் கொன்றதால் தன் கோல் கோடிற்றென்று கண்ட நொடியே உயிர் துறப்பானாயின், அவன் அறவுணர்ச்சி எத்துணை அளவிறந்த தாய் இருந்திருத்தல் வேண்டும்! கொடை: அக்காலத்தரசர், அறம்நோக்கியும் கலை வளர்ச்சி பற்றியும் ஊழியப் பாராட்டாகவும், வினையூக்கற் பொருட்டும். பல்வேறு கொடை நிகழ்த்தி வந்தனர். அவை, உண்டிக்கொடை, பொற்கொடை, ஊர்திக்கொடை, விலங்குக்கொடை, சின்னக் கொடை, பெயர்க்கொடை, நிலக்கொடை, மகற்கொடை, ஆட்சிக்கொடை என ஒன்பான் வகைப்படும். பார்ப்பனர்க்கு நாள்தோறும் உணவளிக்கும்படி, ஆங்காங்கு கோயில்களிலும் மடங்களிலும் ஊட்டுப்புரைகளிலும் நிதியும் மானியமும் விட்டிருந்தது, உண்டிக் கொடையாகும். பெருஞ் சோற்றுதியஞ்சேரலாதன் பாரதப் போர்ப்படைகளிரண்டிற்கும் பதினெட்டுநாளும் பெருஞ்சோறு வழங்கியதும், உண்டிக் கொடையின் பாற்படும். புலவர்க்களித்த பல்லாயிரக்கணக்கான பொற்காசும், பாணர்க் களித்த பொற்றாமரைப்பூவும், பாடினியர்க்கும் விறலியர்க்கும் அளித்த பொன்னரிமாலையும், ஆடல்பாடல் அரங்கேறிய பாணர்க்கும் கணிகையர்க்கும் அளித்த ஆயிரத்தெண்கழஞ்சு பொன்னும், ("முட்டில் பாணரும் ஆடியன் மகளிரும் எட்டொடு புணர்ந்தவாயிரம்பொன் பெறுப்” என்பது அடியார்க்கு நல்லாருரை மேற்கோள் (சிலப். பக். 121) வெற்றிவிழாத் தொடர் பாக மறையோர்க்களித்த துலாபாரம் (சேரன் செங்குட்டுவன் மாடலமறையோனுக்களித்த துலாபாரம் 50 துலாம் (375 பவுண்டு) பொன்னாகும்.) என்னும் ஆள் நிறைப் பொன்னும் இரணிய கருப்பம் என்னும் பொற்குடமும், பொற்கொடை யாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/287&oldid=1432004" இலிருந்து மீள்விக்கப்பட்டது