பக்கம்:தேவநேயம் 1.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அறமும் கொடையும் பாவாணர் மடத்திற்கு விடப்படுவது மடப்புறம். கோயிற்கு விடப்படுவது தேவதானம் அல்லது தேவதானப்பற்று (தேவதாயம், திருநாமத்துக்காணி, திருவிடை யாட்டம், திரு விடைப்பற்று). குடியிருக்கும் மக்களொடு சேர்த்துக் கோயிற் களிக்கப்படும் நிலம் குடி நீங்காத் திருவிடையாட்டம் எனப் படும். பிடாரிகோயிற்கு விடப்படும் மானியம் பிடாரிபட்டி அல்லது பிடாரிவிளாகம் என்றும், சமணபௌத்தப் பள்ளிகட்கு விடப்படுவது பள்ளிச்சந்தம் என்றும், பெயர்பெறும். அறம் நோக்கியும் மதம் பற்றியும் விடப்படும் மானியமெல்லாம் பொதுவாக அறப்புறம் எனப்பெறும். பார்ப்பனர்க்கும் கோயிற்கும் ஒரு முழுவூரைத்தானஞ் செய்யும் போது, ஒரு பெண்யானையை அவ்வூரைச்சுற்றிப் போகவிட்டு, அதுபோனவழியே எல்லையமைத்துக் கல்லுங்கள்ளியும் நட்டி, நீரட்டிக் கொடுத்து, பெரும் பணைக்காரன் என்னும் அதிகாரி வாயிலாய், செப்பேட்டில் அரசாணை (ஆணத்தி) பொறிப்பது மரபு, பெண் யானையைவிட்டு எல்லையமைத்தல் 'பிடி சூழ்ந்து படாகை நடத்தல்' எனப்படும். தானஞ் செய்யப்படும் ஊரிலுள்ள உழுதுண்பார் 'காராண்மை' என்னுஞ் சொல்லாலும், உழுவித் துண்பார் 'மீயாட்சி' என்னுஞ் சொல்லாலும், குறிக்கப் பெறுவர். இனி, ஓர் ஊரை மேற்பார்க்குங் கூட்டமும் 'மீயாளுங் கணம்' எனப்படும். நீரட்டிக் கொடுத்த செப்பேட்டுத் தான மெல்லாம் அட்டிப்பேறு எனப் பட்டன. கோயிற்கு விடப்படும் நிலமெல்லாம் இறையிலியாக இருக்க வேண்டியிருந்தமையின், அரசன் தானாய்ச் செய்யாத தேவதான மெல்லாம் அவனுடைய இசைவுபெற்றே செய்யப்பட்டன. அங்ஙனஞ் செய்யும்போது, இறை நீங்கலால் அரசியற்கு ஏற்படும் இழப்பிற்கு ஈடாக, தானஞ் செய்பவன் அல்லது செய்பவர் ஒரு குறித்த தொகையைப் பண்டாரத்திற் சேர்க்கும்படி ஊரவை யாரிடம் கொடுத்து விடுவது வழக்கம். ஒரு நிலம் அல்லது ஊர் இறையிலியாக்கப்படும் போது, அதன் இறை நீக்கம் 'இறங்கல்' என்றும், அதை இறையிலிப் பதிவுப் புத்தகத்தில் பெயர்த்தெழுதுதல் 'நீங்கல்' அல்லது 'நாட்டு நீங்கல்' என்றும், குறிக்கப் பெறும். வரிக்கணக்கையும் நிலங்களின் நிலை மையையும் எந்தச் சமயத்திலும் தெரிந்துகொள்ளற் பொருட்டு, பல்வேறு கணக்குகள் வைக்கப்பட்டிருந்தமையின், சில சமயங் களில் ஓர் இறையிலி ஆணைக்கு ஐம்பதின்மருக்கு மேற்பட்ட அதிகாரிகள் கைந்நாட்டிட வேண்டியிருந்தது. இறுதியில் அரசன் இடும் முடிவான ஆணை கடையீடு எனப் பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/290&oldid=1432008" இலிருந்து மீள்விக்கப்பட்டது