பக்கம்:தேவநேயம் 1.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவாணர் நூற் கருக்கம் பாவாணர் பாவாணர் தம் வரலாற்றின் ஒரு பகுதியாகிய அண்ணாமலை நகர் வாழ்க்கை பற்றி எழுதிய நூல் ஆதலால் அதனொடு அவர் வரலாற்றுக் குறிப்புகளும் இடம் பெறுதல் முறையெனக் கொண்டு நூன் முகப்பில் பாவாணர் வாழ்க்கைக் குறிப்பு என்னும் தொகுப்பு ஏழுபக்க அளவில் பதிப்பாளரால் சேர்க்கப்பட்டுள்ளது. முன்னும் பின்னுமாய அவர்தம் வரலாற்றை அறிந்துகொள்ள உதவியாவது இது. பாவாணர் நூற்பட்டியும் உண்டு. நூல் முயற்சிப் படலம், அமர்த்தப்படலம் பணி செயற்படலம் (முதற்பகுதி, இரண்டாம் பகுதி) துறைமாற்றுப்படலம், நிலைமை தெரிபடலம், நீக்கப்படலம் என ஆறுபடலங்களையுடையதாய் நூல் 60 பக்க அளவில் அமை கின்றது. விலை உருபா. ஐந்து, தமிழின் உண்மைத் தன்மையை எடுத் துரைத்தற்கும் காத்தற்கும் நுண்மதி, தமிழ் ஆங்கிலப் புலமை, ஆய்வுத் திறன், நடுநிலை, அஞ்சாமை, தன்னலமின்மை ஆகிய அறுதிறம் இன்றியமையாது வேண்டும் என்கிறார் பாவாணர் (16) தமிழ்வேர்ச்சொல் அகரமுதலி என்னையன்றி வேறெவராலும் தொகுக்கமுடியாது என்னும் துணிவு பாவாணர்க்கு எழுந்ததால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ் ஆராய்ச்சித் துறைக்கு விண்ணப்பம் விடுத்தார். அதற்குத் தடையும் காலக்கடப்புமாகி ஒருவாறு ஆணை எய்தியது. அதனைக் கண்ட பாவாணர் பசி யடங்கினவன் பெற்ற உணவு போல் ஆணையைப் பெற்றுக் கொண்டதாக உரைக்கிறார் (22), ஆணையை அடுத்தே பாவாணர் ஆய்வை மேற்பார்வையிடும் குழுவினர் ஒன்பதின்மர் பெயர்கள் எய்துகின்றன. அதனைக் கண்ட பாவாணர், என்னளவு தமிழாராய்ந்தவரேனும் என் பணியை மேற்பார்க்கத் தக்கவரேனும் ஒருவரும் அப்பட்டியில் இலர் என்பதைக் கண்டுகொண்ட பாவாணர், தம்மை வெளியேற்ற அமைத்த ‘தள்ளிவெட்டி' இது என்பதை உடனே கண்டு கொள்கிறார். கால்டுவெலும் மார்க்கசுமுல்லரும் செசுப்பர்சனும் இத்தகைய கட்டுப்பாட்டிற்கும் முட்டுப்பாட்டிற்கும் ஆளாய் இருந்திருப்பின் அவர் மனநிலை எங்ஙனம் இருந்திருக்கும் என்று வினாவும் வினாவிலேயே அவர் மனநிலை புலப்படுகின்றது. பாவாணர் தொகுத்தற்குரிய அகரமுதலியின் போலிகையாக ஐம்பது சொற்களுக்கு வேரும் வரலாறும் பொருளும் விளக்கமும் எழுதத் தொடங்கினார். அந்நிலையில் தேராதூனில் நிகழவிருந்த வண்ணனை மொழிநூல் பயிற்சிக்குத் தேர்ந்தெடுத்து அனுப்பப் பட்டார். அப்பயிற்சி பற்றிப் பாவாணர், "அஃது எனக்கும் உண்மை யான மொழி நூற்கும் பயன்படுவதன்று. வடநாட்டு மக்களின் வாழ்க்கை முறையும் மொழிவழக்கும் ஆக்ரா, தில்லிக் காட்சிகளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/36&oldid=1431334" இலிருந்து மீள்விக்கப்பட்டது