பக்கம்:தேவநேயம் 1.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவாணர் நூற் கருக்கம் பாவாணர் 27 பழநாள் மரபில் பாட்டொடு உரையிடை யிட்டுவரத் தகடூர் யாத்திரை பெருந்தேவனார் பாரதம் சிலப்பதிகாரம் என்பவை அமைந்தாற் போல, இந் நூலிடை உரைநடை அமைத்துள்ளார். அவ்வுரைநடையில் கிறித்துவின் பாடுகள் தனிச் சிறப்பாக எடுத்தோதப் படுகின்றன. "பாடில்லாமல் பயனில்லை” என்னும் பொதுமக்கள் மொழியைச் சிறப்பு மொழிச் சீர்த்தியாக்கிச் “சிலுவைப்பாடு இல்லாமல் பிறப்பு இறப்பு உயிர்த்தெழுதல் என்பவற்றால் பயனில்லை” என்பதை நயமாகத் தருக்கமுறையுடன் விளக்குகிறார். ஒரு சிந்தனையாளி எதனைச் சிந்திப்பினும் பிறரினும் தனியோங்கிய நுண்மைகளைக் காண்பார் என்பதை மெய்ப்பிக்கும் சான்றாகின்றது இது. "அன்பு, ஊழியம், தியாகம் என்னும் மூன்றும் சிலுவைப் பாடுகளிலேயே திரண்டு கிடக்கின்றன” என்று கூறும் தேவநேயர் 'கிறித்து மார்க்க சாரம்' இதுவே என்கிறார். "ஒவ்வொரு கிறித்தவனும் கிறித்தவர்களை அல்ல, கிறித்து வையே பின்பற்ற வேண்டும். இதுவே மீட்பின் வழி” என்று ஒப்பிலாச் சிலுவைப் பாட்டை எடுத்துரைக்கும்போது அவர்தம் மெய்ம்ம மதிப்பீடு புலப்படும். பழந்தமிழ் ஆற்றுப்படை போல், “கிறித்துவின் பாடுகளைப் பற்றி வேதநாயக சாத்திரியாரும், இரத்தினப் பரதேசியாரும், பண்டிதர் சத்திய வாசகம் பிள்ளை அவர்களும் இயற்றிய கீர்த்தனைகள் மிகவும் அருமையானவை. அவற்றையும் படிப்பின் ஆத்துமாவிற்கு ஆனந்தமுண்டாகும் ” என்று கூறுவது பயனுடை யார் பண்பு பாராட்டலாகும். அன்புறு பதிகம் என்பதைத் திருநேரிசைப் பண்ணில் இயற்றியுள்ளார் பாவாணர். அப்பதிகம் அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தத்தால் ஆயது. அதன் ஈற்றடிகள் எல்லாமும் "அன்பெனக் கில்லாவிட்டால் ஆவதொன்றில்லை காணே" என்னும் முடிநிலை கொள்ளவே அமைத்துள்ளார். அதனால், அன்பு மென்னடை எதுகையில் இயலுமாறே பதிகம் இயற்றியுள்ளார் என்பது வெளிப்பட்டுப் பொருட்சிறப்பும் ஒருங்கே விளக்கமுறல் தெளிவாம். "நண்பெனும் சிறப்புக் கொண்ட நவையலும் ஆர்வ மாந்தர் புன்கணீர் பூசல் செய்யப் புதவுடை வெள்ளமாகி என்புயிர் பொருள்க ளெல்லாம் ஏனையோர்க்குரிமை செய்யும் அன்பெனக் கில்லாவிட்டால் ஆவதொன்றில்லை காணே” என்னும் பாடலில் அன்புடைமை வள்ளுவம் ததும்பி வழிகின்றமை 'அன்பே இறைமை 'யாகக் காணும் களிவுறு காட்சியாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/44&oldid=1431343" இலிருந்து மீள்விக்கப்பட்டது