பக்கம்:தேவநேயம் 1.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவாணர் நூற் கருக்கம் பாவாணர் உள்ளடக்கம் என்னும் தலைப்பில் ' தமிழன் கெட்ட வழிகள் என்னும் குறிப்பில், மதப்பைத்தியம், கொடைமடம், இனநலம் பொறாமை அல்லது தன்னினப் பகைமை, குறிபார்த்தல், துறவியைப் பின்பற்றல், ஆரியம், அரசியற் கட்சிகள் என்னும் முறை வைப்பில் அமைக்கிறார். முறை முறையே விளக்கமும் புரிகிறார். முகவுரையில் 'வெள்ளைக்காரன் உடுத்திக் கெட்டான்; துலுக்கன் தின்று கெட்டான். தமிழன் வைத்துக் கெட்டான் என்னும் பழமொழியைச் சுட்டிக் காட்டி கல்வி செல்வம் என்னும் இருவகையையும் தமிழன் வைத்துக் கெட்டவனாய் இருக்கிறான் என்கிறார். ஒருவன் கெடுவது மூவகை என்னும் பாவாணர் 'ஒன்று அறிவோ பொருளோ அவையிரண்டுமோ இல்லாமை; அவை இருந்தும் பயன்படுத்தாமை; அவற்றைத் தவறாய் ஆளுதல்' என்கிறார். முகவுரை நிறைவில், தமிழன் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னரே உலகத்தில் பலதுறைகளிலும் தலைசிறந்தவனாயிருந்தும் பிற்காலத்தில் தன் பகுத்தறிவைப் பயன்படுத்தாது வைத்துக் கெட்டமை இச்சுவடியில் விரிவாய்க் கூறப்படும்” என்று நுதலிப் புகுகிறார். தமிழர் மதம் தமிழர் வரலாறு முதலிய நூல்களில் பாவாணர் தமிழன் கெட்டவகைகளை எழுதியுள்ளார். அவற்றினும் இது விரிவுடையதாகும். இந்நூலை எழுதிய பின்னரும் நாற்பான் ஆண்டுகள் பாவாணர் வாழ்ந்தார். அதன் பின்னரும் இருபான் ஆண்டுகள் கடந்துவிட்டன. எனினும் பாவாணர் சுட்டிய குறைகள் ஏழும் மிகுதிப் பட்டுள்ளனவே அன்றிக் குறையும் பாடில்லை. அறவே தீரும்பாடு அரும்பவும் இல்லை . தமிழர் நலம் பேசி - புகழ் பேசி வந்தவர் தந்தலம் பெருக்கு வாராய், கூட்டுக் கொள்ளைக்கும் அதிகாரக் களத்திற்கும் பயன்படுத்துவாராய்த் தமிழர் தலைவர் என்பார் ஆகிவிட்டமையால் குறை களையும் குறிக்கோள் இல்லாராகிவிட்டனர். கரட்டு நிலத்தில் கார்சம்பா நட்டால் என்னாம்? பண்படுத்தம் இல்லாப் பயன்படுத்தம் அவ்வாறேயாம்! "சில திருப்பதிகளில் தேரோட்டக்காலத்தில் தேர்க்காலின் கீழ்த் தலையைக் கொடுத்திறப்பதும், கும்பகோணத்தில் மகாமகக் குளத்தில் மிதியுண்டு சாவதும், சில கோயில்கட்குப் பிள்ளை வரத்திற்குச் சென்று தெரிந்தோ தெரியாமலோ தம் மனைவியரைக் கற்பழிவிப்பதும் அல்லது இழப்பதும் கோயில் வழிபாட்டிற்குச் சென்றவிடத்தும் தம் அழகான அருமந்த மகளிரைத் தேவ கணிகை யராக விட்டுவிட்டு வருவதும் பண்டைத் தமிழருள் பகுத்தறிவற்று மானங்கெட்ட மதப்பித்தர் சிலரின் செயல்களாகும் என்றும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/72&oldid=1431390" இலிருந்து மீள்விக்கப்பட்டது