பக்கம்:தேவநேயம் 1.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவாணர் நூற் கருக்கம் பாவாணர் தமிழனும் வாழவழியில்லை. ஆகவே இந்நூலை எழுதத் துணிந்தேன்” என்கிறார். தமிழின் தென்மை , தமிழின் திரிபு வளர்ச்சி, ஆரிய மொழிக் குடும்பம், வடமொழிப் பெயர்கள், ஆரியர்க்குப் பிறந்தகமின்மை , வடமொழியின் ஐந்நிலை, இந்திய ஆரியர் வருகை, வேதமும் வேதமொழியும், வேத ஆரியர் தென்னாடு வருகை, சமற்கிருத வாக்கம், தொல்காப்பியமும் பாணினீயமும், ஆரிய ஏமாற்று, மூவகை வடசொற்கள், முக்கால வடமொழித் தமிழ்ச் சொற்கள், மேலையர் திரிபுணர்ச்சி, தென்மொழி வடமொழி வேறுபாடு, தென்மொழி வடமொழிப் போராட்டம் என்னும் பதினேழு தலைப்புகளில் முறையே முன்னுரையை வரைகின்றார். "இந்திய ஐரோப்பிய மொழித் தொகுதியின் தொடக்க நிலை தமிழாயும் முடிவு நிலை சமற்கிருதமாயும் இருப்பதால் வடமொழி யின் வரலாற்றை அல்லது இயல்பைத் தெளிவாய் அறிதற்கு, தமிழின் பிறந்தகம் எதுவென்று முதற்கண் காணல் இன்றியமையாதது” என்று தமிழின் தென்மை தொடங்கி முன்னுரையில் ஆய்வது நல்ல நுழைவாயில் ஆகின்றது. இந்தியாவிற்குள் பிராமணர்க்குத் தனிநாடில்லாமை போல், விரிநீர் வியனுலகிலும் ஆரியத்திற்குப் பிறந்தகம் இல்லாமையைக் குறிப்பிடும் பாவாணர், "திரவிடம் வடமேற்காகத் தொடர்ந்து சென்று காண்டி னேவியத்தை முட்டித் திரும்பி, ஐரோப்பாவில் ஆரியமாக மாறியபின், மீண்டும் தென்கிழக்காக வந்து வடஇந்தியாவில் வேத ஆரியத்தையும் தென்னிந்தியத் தொடர்பினாற் சமற்கிருதத்தையும் பிறப்பித்திருப்பதால், இந்தியாவும் ஐரோப்பாவும் ஆகிய இரு கோடிகளும் இவற்றிற் கிடைப்பட்ட பல இடங்களும் ஒவ்வொரு வகையில் ஒவ்வோரளவு ஆரியப் பிறந்தகமாக, வெவ்வேறு கோணத்தில் நோக்குவார்க்குத் தனித்தனி காட்சியளிக்கின்றன” என்கிறார். தென்திரவிடம், வடதிரவிடம் எனப் பகுத்து ஆய்வது ஆழமிக்க செய்தியாம். தென்திரவிடமாகிய வடுகு மொழியே முதற்கண் வடமொழி எனப்பட்டதையும், வடதிரவிட வட்டார மொழி பிராகிருதம் என்பதையும், விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள கூர்ச்சரம், மகாராட்டிரம், ஆந்திரம், கன்னடம் திராவிடம் (தமிழ்) ஆகிய ஐந்நாடுகளும் பஞ்ச திராவிடம் என வழங்கியதையும் குறிப் பிடுகிறார். பிராகிருதம் என்னும் வடதிரவிடத்திற்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை ஐம்பான் சொற்களை எடுத்துக்காட்டி நிறுவுகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/94&oldid=1431417" இலிருந்து மீள்விக்கப்பட்டது