பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

தேவார ஒளிநெறிக் கட்டுரை


19. அழுது தொழும் அடியார் [5 (17)] :-அடியார் இறைவன் திருவடியில் வீழ்வார்; உளங்கசிவர் ; கண்ணிர் மல்குவர், இறைவன் திருநாமங்களைச் சொல்லி அழைப்பர், அரற்றுவர், இசைபாடுவர், இரவும் பகலும் நினைப்பார், ஏத்துவார், விம்முவார், வெருவுவார், இங்ஙனம் அழுதெழும் அன்பர்தம் சிந்தைத் திறத்தினன் இறைவன்.
20. ஆடல் பாடல் செயும் அடியார் [5 (18)] :- அடியார்கள் இறைவன் சந்நிதியில் கிருத்த கீதஞ் செய்வார்கள் [வண்ணங்கள் பாடுவார்கள்; ஆடுவார்கள்.].
21. சிவநாமம் பஜிப்பவரும் சிவத்யானம் செய்பவரும் [5 (19)] :-சிவனடியார் சிவபெருமானையே உள்கி நிற்பார்; அரனே என உன்னி நைவார். சிவபெருமானைத் தியானிப்பவருடைய சிந்தை தேவர்கள் வாசஞ் செய்யத் தக்கதாகின்றது. சிவநாமங்களைச் சொல்லிச் செபித்தும், பாடியும், அரற்றியும், பிதற்றியும், இரு போதும் பணிவார்களைத் துயரங்களும் வினைகளும் நலியா. அவர்களுக்குச் சிவனருள் நிரம்பக் கிடைக்கும். அவர்களுக்கு அரிய ஞானத்தை இறைவன் அளிப்பான். நிதியே, மணியே என்று சித்தம் உருகி நைபவர்க்கே இறைவன் திருவருள் கூடும்; பிறருக்குக் கூடாது. எத் தொழிலில் ஈடுபட்டிருப்பினும் நினைப்பு சிவன் மாட்டிருத்தல் வேண்டும்.
22. தேவார அடியார் [5 (21)]:-திருஞான சம்பந்தப் பெருமான் சொன்ன பதிகங்களை இரவும் பகலும் நினைந்தேத்தி நின்று, விம்மி, வெருவி, விரும்பும் அடியாரும், அப்பதிகங்களை இசையுடன் இனிது சொல்லவல்ல தொண்டர்களும், அப்பதிகங்களைப் பாடி யாடும் அடி யார்களும், அப்பதிகங்களே தமக்குத் தஞ்சமெனக் கொண்டு இசைமொழிந்த அடியார்களும் தடுமாற்றம் இலராகிச் சிவன் சேவடியை அண்மி வாழ்வார்கள். சம்பந்தப் பெருமானது பத்துப் பாட்டுக்களையும் கற்றுவல்லவர் “அடியவர்” ஆம் என்க.