பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


23. திருநீறிடும் அடியார் [5 (20)] :- சிவனடியார் ஒளி வீசும் தூய வெண்ணீ றணிவார். திருவிழாக் காலங்களிற் சிவனடியார் திருக்கூட்டம் திருநீறு பொலியச் சுவாமியின் பின் செல்லும்.

24. பாடும் அடியார்; இசை பாடும் அடியார் | 5 (32)]:- அடியார் இன்னிசை பாடி இறைவன் குணங்களைப் பரவி ஏத்துவார். திருவிழாக்களில் தொண்டர் கூட்டங்கள் வந்து இசையுடன் இறைவன் திருப்புகழைப் பாடி வலம் வரும். கோழை நிரம்பிய மிடற்றினராயும், கவிகோள் இலராயும் தமக்கு வந்தவாறு இசைகூட்டி ஏழை யடியாரவர்கள் யாது சொன்னபோதிலும் இறைவன் அதற்கும் மகிழ்வான். இறைவனைப் பண்ணின் இசையாற் பகர்வாரை நோய் அனுகாது; வினை தொடராது; பாவம் பற்ருது. தம்மைப் பாடிப் பரவும் அடியார்க்கு இறைவன் விண்ணுலக வாழ்வை அளிப்பான்.

25. சிவபூஜை செய்யும் அடியார்; அவர் அடையும் பேறு [5 (23, 24)]:- அபிஷேகத்துக்கு *ஆனைந்து அளிப்பவர் அருள்வேந்த ராவார். அடியார் பூவும் நீருங்கொண்டு இரவும் பகலும் வழிபாடு செய்வார். காலையு மாலையும் அலங்கல் சூட்டுவார். மலர்கொண்டு இண்டை மாலை கட்டித் தொண்டு செய்வார். குருந்தம், குரா, கொன்றை, மத்தம், வன்னி முதலிய நல்ல மலர்கொண்டும், மாலைவகைகள், அகில், சாந்து, தீபம், துாபம், பலி கொண்டும் பூஜை நடைபெறும். அடியார்கள் நிலைகொண்ட மனத்தராய் நாளுமிகு பாடலோடு நல்ல மலரால் தோளுங் கையுங் குளிரத் தொழுவார்கள்.

26. ஜெபஞ் செயும் அடியார் [5 (2)]:- அடியார்கள் ருத்ராக்ஷ மாலை கொண்டு ஜெபஞ் செய்து மந்திரங்கள் கூறி வணங்குவார்கள்.

27. மறையோதும் அடியார் (5 (26):- அடியார் நாலு வேதங்களை ஒதி இறைவனை வணங்குவார்.


*ஆன் ஐந்து-நெய், பால், தயிர், கோமயம், கோசலம் (பஞ்சகவ்வியம்). நெய், பால், தயிர், வெண்ணெய், திருநீறு எனலும் ஆம்.