பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

தேவார ஒளிநெறிக் கட்டுரை

இச்சித்து, மாதரும் இமையோருஞ் சூழ, பூதங்கள் சூழ, இரவும் பகலும் மடவார் மனைதோறும் அரவாட்டி உலகெங்கும் நாளும் வெண்டலையிற் பலியேற்பர்.

63. சிவபிரான் பாம்பாட்டுவது [183]

சிவபிரான் பலிவேண்டி மாதர் மனைதோறும் கூழை வாளரவு ஆட்டுவர். தமது அரையிற் கட்டியுள்ள பாம்பை யெடுத்தாட்டுவர். அப்பாம்பு பளபளப்பும், புள்ளிகளும், செங்கண்னும், விடமும், படமுங் கொண்டுள்ள ஐந்து தலை நாகம்.

64. சிவபிரானுக்குரிய மாலைகள் [94]

சிவபிரான் அணியும் மாலைகளாவன:- கடப்பமாலை (மராம்), கூவிள மாலை (வில்வ மாலை), கொன்றை மாலை, கோங்க மாலை, கோடல் மாலை, தாமரை மாலை, மத்த மாலை, வேங்கை மலர் மாலை, பிற நறுமண மாலைகள். கொன்றை மலர் கொண்டு அலங்கல், ஆரம், இண்டை, கண்ணி, கோதை, தாமம், தார், தொங்கல், தொடையல், பிணையல், வடம் எனப்பெயரிய பலவகை மாலைகள் புனைவதுண்டு. வெள்ளெருக்கு, மத்தம், கொன்றை, வன்னி இவைகளைக் கொண்டு இண்டை கட்டுவர். கொன்றை மாலையே இறைவனுக்கு உகந்தது. இறைவன் திருமார்பிற் கொன்றை மாலை இரட்டை வடமாகப் புரளும். மறைவலார் இறைவனுக்கு மாலையணியும் தொண்டு பூணுவர். இண்டையை இறைவன் சடைக்கும் சூட்டுவர், கழலுக்கும் சூட்டுவர்:

மேற்சொன்ன மலர் மாலைகளே யன்றி, எலும்பு மாலை, தலை மாலை, பாமாலை, ருத்ராக்ஷ மாலை ஆகிய மாலைகளையும், பாம்பு ஹாரத்தையும், புனற் கண்ணி, மதிக்கண்ணியையும் இறைவர் புனைவர்.

65. சிவபிரான் மூவராய மூர்த்தி [203]

சிவபிரான் இருவரோ டொருவனாய் - நிற்பவர்; படைத்து, அளித்து, அழிக்க மும் மூர்த்திகளாயினவர்;