பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௦

முகவுரை


“ஞானசம் பந்தர்திரு நாவரையர் வன்றொண்டர்
பானிகருந் தேவாரப் பாமாலை”

(288-ஆம் கண்ணி)

எனவரும் இடத்தும், பின்னர் இரட்டையர் பாடிய ஏகாம்பர நாத ருலாவில் -

“மூவாத பேரன்பின் மூவர் முதலிகளும்
தேவாரஞ் செய்த திருப்பாட்டும்”

(78-ஆம் கண்ணி)

என வருமிடத்தும் காண்கின்றோம். பின்னர்த் தேவாரம் என்ற பெயரே பிற பெரியோர்களால் ஆளப்பட்டு இன்றளவும் வழக்கில் நின்றுவிட்டது.

மெய்ஞ்ஞானியராம் ஸ்ரீ அருணகிரிகாது சுவாமிகள் முருகவேளே ஸ்ரீ சம்பந்தர் எனக்கொண்டு சம்பந்தப் பெருமான் செய்த லீலைகளை எல்லாம் முருகப்பிரான் லீலைகளாகவே பல பாக்களிற் பாராட்டியுள்ள 1அருமையும், சம்பந்தப் பெருமானத் தவிர வேறு தெய்வமே இல்லை2 என்று அவர் திடம்பட உணர்த்திய பெருமையும் இங்குக் கவனிக்கற்பாலன. சம்பந்தப் பெருமான் போலவே தானும் விரும்பிப் “புகலி யில்வித் தகர் போல அமிர்த கவித் தொடை பாட அடிமைதனக் கருள்வாயே” (திருப்புகழ் 242) என் வேண்டிய அருணகிரியாரின் மனப்பான்மையும், சம்பந்தப் பெருமான் போலவே பாடல்கள் பதினாறாயிரம் அருணகிரியார் பாடின அருண்முடிவும், சம்பந்தப் பெருமானது தேவாரம் முப்பால் செப்பிய கவிதையாகிய திருக்குறளினும் மேலாந்தரத்தது என அச்சமின்றி அவர் அருளிய 3திர மொழி யும், தேவியின் திருவாக்கும் திருமுலைப்பாலுமே தெய்விகத் தேவாரப் பாக்களுக்கு மூல காரணமாயிருந்தன என அவர் வெளிப்படக் கூறிய 4அருண்மொழியும் ஈண்டு ஒர்ந்து களிப்புறற்பாலன.


1.எந்தையார் திருப்புகழ்ப் பதிப்பில்-மூன்றாம் பாகம்-திருப்புகழ் ஆராய்ச்சிப் பகுதி-பக்கம் உ௫-உ௬ பார்க்க.

2.'அமண் சேனை உபாதி கழுமலங்கற்கு உரைத்தோன்
       அலது இல்லை தெய்வங்களே' -கந். அந்தாதி-29.

3.(வென்று இடரற) முப்பால் செப்பிய கவிதையின் மிக்காரத்திலை எழுதி வனத்தே எற்றிய பெருமாளே-திருப்புகழ் 156.

4.முப்பால் செப்பிய கவிதை=திருக்குறள். மிக்கு ஆரம்= மேம்பட்ட தேவாரம்; வனம்= ஜலம்; ஏடு வைகை நீரில் எதிரேறின லீலை.