பக்கம்:தேவிக்குளம்-பீர்மேடு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

ராஜ்ய அரசாங்கங்களும், நிதானமாக சகோதர உணர்வுடன் அணுகி, சுமூகமான பைசல் காணவேண்டுமென்று விநயமாக வேண்டிக் கொண்டேன்.

கேரள எம். எல். ஏ.க்கள் கருத்து

கேரளக் கம்யூனிஸ்டுகளின் தலைவர்களில் இருவர்களான கே. பி. கோபாலனும், டி.சி. நாராயண நம்பியாரும் நான் கூறிய அடிப்படைக் கருத்துக்களைத் தழுவியே சட்டசபையில் பேசினார்கள். கோபாலன் பேசுகிறபொழுது தமிழர்களின் ஒரு அங்குல நிலத்தைக் கூட மலையாளிகள் விரும்பவில்லை யென்றும், கிராம அடிப்படைக் கொள்கையை அளவுகோலாகக் கொண்டால், எல்லை வகுப்பதில் மலையாளிக்கும் தமிழனுக்கும் சமநீதி வழங்கமுடியும் என்றும் தெக்கத் தெளிவாகப் பேசினார். நாராயண நம்பியார் பேசுகிற பொழுது தேவிகுளம்-பீர்மேடு உள்ளிட்ட கேரள-தமிழக் எல்லைப் பிரதேசங்களில், கிராம அடிப்படைக் கொள்கையை அங்கீகரித்து, எல்லையை சுமுகமாக வகுக்க முடியுமென்றார். சென்னை ராஜ்யத்திற்கு உரியதற்குமேல் அதிகமாக வரவேண்டும் என்றும் சென்னை ராஜ்யத்திலிருந்து நியாயமாகப் போகவேண்டிய பிரதேசத்தை சென்னை ராஜ்யத்தோடேயே இருக்கவேண்டும் என்றும் கோரிய நிதி அமைச்சரின் கோரிக்கை வாதத்தை, "ஒருவழிப்பாதை" என்று மிக அழகாக எடுத்துக்காட்டினார். "தேவிகுளம் - பீர்மேடு யாருக்கென்று திட்டவட்டமாகக் கூறுங்கள்" என்று இடைமறித்த பொழுது தமிழருக்கென்றும் சொல்லமாட்டேன்; மலையாளிகளுக்கென்றும் சொல்லமாட்டேன். இரு சகோதர மக்களுக்கும் நலன் ஏற்படும் வகையில் சுமுகமாக பைசல்வேண்டும். அவ்வளவுதான் இந்தச் சந்தர்ப்பத்தில் கூறுவேன் என்று உறுதியுடன் கூறினார்.

நீதியைக் காட்டிக் கொடுக்கக் கூடாது

மணலி கந்தசாமி பேசும்போது "தமிழர்களும் மலையாளிகளும் சகோதரர்கள் என்பதை நாங்கள் மறந்ததுமில்லை. மறுக்கவும் முடியாது. மறக்கவும் மாட்டோம். தமிழனுக்கு ஒரு நீதி ; மலையாளிகளுக்கு ஒரு நீதி என்று நாங்கள் பார்க்கமாட்டோம். தமிழனைக் காட்டிக் கொடுக்கக் கூடாதென்றால், நீதியைக் காட்டிக் கொடுக்கக் கூடாதென்று தான் அர்த்தப்படுத்துகிறோம். மக்கள் நீதியைக் காட்டிக் கொடுப்பவர்கள் நாங்களல்ல; அவர்கள் வேறு. இன்று நாங்கள் பேசுவது வழவழாவாக இருக்கிறதென்று சிலர் தங்களை தமிழர்களின் தலைவர்களாகவும் தளபதிகளாகவும் தருக்கிச் செருக்கிக் கருதிக் கொண்டு எங்களை நையாண்டி பண்ணி எக்களிப்படையலாம். இந்த மாதிரி சந்தர்ப்பங்கள் எங்களுக்குப் புதிதல்ல. இரு ராஜ்யங்களிலும் இனப்பகை சூடேறி நிற்கும் இன்று, நிதானத்துடன்