பக்கம்:தேவிக்குளம்-பீர்மேடு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

இரு திறத்தாரும் சுமுகமான பைசல் காண சகோதர வாஞ்சையுடன் முயல வேண்டுமென்று நாங்கள் எடுக்கும் நிலைதான் சரியான நிலை என்பதை எதிர்காலம் பாராட்டும் என்பதில் எங்களுக்குச் சந்தேகமில்லை" என்று உறுதியாகவும் உருக்கமாகவும் பேசினார். இறுதியாக ராமமூர்த்தி பேசியபோது, சுமுகப் பைசலின் இன்றியமையாமையையும், அதற்குரிய ஜனநாயக வழியையும் விரிவாகவும் விளக்கமாகவும் வலியுறுத்திப் பேசினார்.

எங்கள் சாதனை

ஒற்றுமைக்கான எங்கள் சாதனைகள் என்ன? முதலாவதாக, தொடர்ச்சியைக் கணக்கிலெடுத்து கிராம அடிப்படையில் எல்லை வகுக்க வேண்டுமென்ற கொள்கையை எல்லாக் கட்சிகளையும் சேர்ந்த பெரும்பாலான அங்கத்தினர்கள் ஒப்புக்கொள்ளும்படி செய்தோம். ஆனால் அதே பொழுதில், தேவிகுளம், பீர்மேடு, கூடலூர், காசர்கோடு ஆகிய தாலுக்காக்கள் வரும்போது, அவர்கள் மேற்கூறிய கொள்கையைக் காற்றில் ஊதிப் பறத்திவிட்டு பச்சை சந்தர்ப்ப வாதிகளாக நின்றதையும் உலகறியச் செய்தோம். இரண்டாவதாக எல்லைப் பிரச்னைக்கு பைசல் காண்பதில் தமிழ் மக்களும் மலையாளி மக்களும் ஒன்றுபட்டு நிற்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, நாங்கள்—தமிழ், மலையாளி கம்யூனிஸ்டுகள் — சட்ட சபையில் தீர்மானத்தில், திருத்தத்தில், வாக்கெடுப்பில் ஒரே நிலை எடுத்தோம். இந்தப் பெருமை வேறு எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை.

திரு—கொச்சி சட்ட சபையில் மலையாள கம்யூனிஸ்டுகள் தான் அங்கம் வகிக்கிறார்கள். தமிழ் கம்யூனிஸ்டுகள் இல்லை. சென்னையிலும் திரு—கொச்சியிலும், சீரமைப்பு கமிஷன் சிபார்சு பற்றி அடிப்படையான கொள்கையில் கட்சிகளுக்கிடையில் மாறுதல் எதுவும் இல்லை. இங்கும் அங்கும் நிலைமையில் மேல்வாரியான மாறுதல் காணப்படுவது போல், கட்சிகளின் பிரதிபலிப்பிலும் மேல்வாரியான மாறுதல் காணப்படுகிறது.

அங்கும் கம்யூனிஸ்டு அங்கத்தினர்கள் கேரள ராஜ்ய அமைப்பை வரவேற்று, எல்லை வகுப்பில் கிராம அடிப்படைக் கொள்கையை இதர அங்கத்தினர்களும் ஏற்கும்படி செய்யவே போராடி இருக்கிறார்கள்.

இதற்கு இரண்டே உதாரணங்கள் காட்ட விரும்புகிறேன். (1) கமிஷன் சிபார்சுகளின் மீது வாக்கெடுப்பு, (2) எதிர்க்கட்சித் தலைவரும், கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.யுமான டி. வி. தாமஸின் பேச்சு.

வாக்கெடுப்பின்போது திரு—கொச்சி சட்டசபை கம்யூனிஸ்டு அங்கத்தினர்கள் நடந்து கொண்டதை முதலில் கவனியுங்கள்.