பக்கம்:தேவிக்குளம்-பீர்மேடு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

அனுமதிக்கமாட்டா ரென்றும், பல்மொழி பேசுகிற மக்களை ஒரு ராஜ்யத்தில் கூட்டாக வைத்தால்தான் தேசீய ஒற்றுமை வளர வழியுண்டு என்றும் பேசினார். இத்தகைய ஒருவர் தேவிகுளம் -பீர்மேடு சென்னையுடன் இணைய வேண்டுமென்றால், அது அங்குள்ள தமிழரின் உரிமையைக் காக்க அல்ல; அங்குள்ள தண்ணீர் தங்கு தடையின்றி மதுரை, ராமநாதபுரம் ஜில்லாவுக்கு வேண்டுமென்றுதான் என்பதை யாரும் எளிதில் புரிந்துகொள்ள முடியும். சட்டசபை காங்கிரஸ் கட்சி கொரடா ராஜாராம் அந்தத் திருத்தத்தின் மீது வாக்கெடுக்கக் கோரினார். அவர் மதுரை ஜில்லா திருமங்கலம்வாசி. தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கக்கன், பெரியாற்றுத் தண்ணீருக்காக, தேவிகுளம் - பீர்மேட்டைக் கோருகிறார். அவர் மதுரை ஜில்லா மேலூர் தாலுக்காவாசி. இவர்களுக்கு, தேவிகுளம்- பீர்மேடு தமிழர் உரிமையைவிட அங்குள்ள தண்ணீர் மதுரை - இராமநாதபுரம் ஜில்லாக்களுக்குக் கிடைக்கப் போராடினார்கள் என்று அந்த ஜில்லாக்களிலுள்ள மக்கள் நம்பும்படி ஆர்ப்பாட்டம் செய்யவேண்டும். தேவிகுளம்-பீர்மேடு கிடைக்க இறுதிவரையில் காங்கிரஸ்காரர்கள் போராடப்போவதில்லை. இதை தேவிகுளம்-பீர்மேட்டுப் பிரதிநிதிகளே என்னிடம் நேரில் ஹோட்டல் எவரஸ்டில் வைத்துச் சொன்னார்கள்.

தி. த. நா. காங்கிரஸ்

திரு-கொச்சி தமிழகப் பிரதேசம் முழுவதையும் தாய்த் தமிழகத்தோடு இணைத்துவிடுவது ஒன்றையே தனிப்பெருங் குறிக்கோளாகக் கொண்டு பிறந்ததும் வளர்ந்ததும்தான் தி.த.நா .காங்கிரஸ் என்று அதன் தலைவர்கள் சொல்லி வந்திருக்கிறார்கள். தி.த.நா.காங்கிரஸ் கொடியின் கீழ், திரு-தமிழகத்திலுள்ள எல்லா அரசியல் கட்சிகளும் வந்து நின்று, ஐக்கிய தமிழகத்திற்காகத் தொண்டாற்றுவதே முறை என்று கூறி வந்திருக்கிறார்கள். தி.த.நா. காங்கிரசுக்கு வேறு அரசியல் லட்சியம் கிடையாதென்றும் கால அகாலம் பாராமல் அவர்கள் பிரசார முரசடித்திருக்கிறார்கள்.

ஆனால் இவ்வாறு பிரசார பேரி கொட்டியவர்கள், காலமெல்லாம் தேசிய காங்கிரசின் தொங்குசதையாக இருந்துவந்திருக்கிறார்கள். தேசீய காங்கிரசோடு ஊடுவதும் கூடுவதும் தி.த.நா.காங்கிரஸ் தலைமை வழக்கமாகக் கடைபிடித்துவந்துள்ள அரசியல் தந்திரம்.

தாய்த் தமிழகத்தோடு திரு-கொச்சி தமிழகம் மெய்யாகவே இணைய வேண்டுமென்று விரும்புகிற பத்தாயிரக் கணக்கான மக்கள் இந்தத் தலைவர்களை நம்பி பற்பல கஷ்டநஷ்டங்களுக்கும் பரம தியாகங்களுக்கும் ஆளாகி யிருக்கிறார்களென்பதும் உண்மை.

அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின் கரை, செங்கோட்டை, தேவிகுளம், பீர்மேடு (கொச்சி) சித்தூர் ஆகிய ஒன்பது தாலுக்காக்களும் தமிழ்த் தாலுக்காக்கள், அவை