பக்கம்:தைத் திங்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார் 97


"மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்"

(1)

"தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்”

(4)

"மாலே மணிவண்ணா மார்கழி நீ ராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன

கேட்டியேல்"(26)

என்பன ஆண்டாளின் திருப்பாவைப் பாடல் பகுதி களாகும். ஆண்டாள் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள 'மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்' என்பது ஆதிரை நாளாகும். மதி நிறை நன்னாள் என்றால், நிலா (சந்திரன்) முழு நிறைவு பெற்ற பருவம் (பெளர்ணமி) ஆகும், மார்கழித் திங்களில் ஆதிரையும் பருவமும் ஒரே நாளாக இருக்கும் என்பதை ஈண்டு மீண்டும் நினைவுகூர வேண்டும். எனவே, மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் என்றால் 'ஆதிரை நாள்' என்பது பெறப்படும். இந்த மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளாகிய ஆதிரை நாளில் 'நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்' என்று ஆண்டாள் கூறியுள்ளார். எனவே, 'ஆதிரை நீராடல்’ என்பதும் சிறப்பிற்கு உரியது.

ஆண்டாள் முதல் பாடலில் ஆதிரை நாளை விதந்து குறிப்பிட்டிருப்பினும், நான்காம் பாடலிலும் இருபத்தாறாம் பாடலிலும் முறையே 'மார்கழி நீராட’ 'மார்கழி நீராடுவான்' எனக் கூறப்பட்டிருப்பது பொது வாக மார்கழி நீராடலின் சிறப்பை உணர்த்துகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/114&oldid=1323386" இலிருந்து மீள்விக்கப்பட்டது