பக்கம்:தைத் திங்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98 தைத் திங்கள்

கன்னியர் நல்ல கணவர் கிடைக்கவேண்டும் என நோன்புற்று வேண்டிக்கொள்வது போலவே, உலகம் வாழ மழை பெய்யவேண்டும் எனவும் வேண்டிக் கொள்வர் என்பது, 'வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட' என்னும் ஆண்டாள் பாடலால் அறிய வருகிறது. இது, 'வெம்பாதாக வியனில வரைப்பென அம்பா ஆடலின்' என்னும் பரிபாடல் பகுதியை நினைவுறுத்துகிறது.

மார்கழி நீராடுதல் வடமொழி நூல்களிலிருந்து தமிழகத்தில் அறியப்படவில்லை; தமிழ் மக்கள் முன்னோர் காலத்திலிருந்தே வழி வழியாகச் செய்து வரும் வழக்க நிகழ்ச்சியே இது என்பதை 'மார்கழி நீராடுவான் மேலையார் செய்வன' என்னும் ஆண்டாள் பாடல் பகுதியால் அறியலாம் என்பதாக அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். 'மேலையார் மொழிந்தன' என்றிராமல், 'மேலையார் செய்வன' என்றுள்ள சொல்லாட்சி, மார்கழி நீராடல் என்பது வழி வழி வந்த ஒரு செயல் முறை என்பதை அறிவிக் கின்றதல்லவா?

மார்கழி நீராடலிலேயே ஆதிரை நாளில் நீராடுதல் ஆண்டாளால் விதந்து குறிப்பிடப்பட்டிருத்தலின், 'ஆதிரை நீராடல்' என்பது ஒரு தனிச் சிறப்பிடம் பெற்றுள்ளது. 'ஒன்றொழி பொதுச்சொல்’ என்னும் நன்னூல் நூற்பாவின் கீழ் 'மருவூரார் தைந் நீர் ஆடினார்' என மயிலை நாதர் வரைந்துள்ள உரைப் பகுதி முன்னர் எடுத்துக் காட்டப் பெற்றுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/115&oldid=1323387" இலிருந்து மீள்விக்கப்பட்டது