பக்கம்:தைத் திங்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102 தைத் திங்கள்

இரண்டு பரிபாடல் அடிகளின் கருத்தைத் தொகுத்து 'மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்' என்று ஆண்டாள் அருளிச் செய்துள்ளார். அடுத்து நீராடலுக்கு வருவோம்:

மார்கழி ஆதிரையில் விழா தொடங்கியதாகவும் கன்னியர் அம்பா நீராடியதாகவும் பரிபாடலில் கூறப் பட்டிருப்பதைக் காணலாம். இந்தப் பரிபாடல் பகுதிக்குச் சிலர் திரிபாகப் பொருள் புரிந்து கொண் டுள்ளனர். மார்கழி ஆதிரையில் விழா தொடங்கப் பட்டது; கன்னியர் அம்பா ஆடினர்-என்னும் பகுதியைக் கண்டதும், 'கன்னியர் ஆதிரை நீராடினர்' என்பதாக ஒரு சாரார் எழுதியுள்ளனர். ஆனால் பரிமேலழகர் இதை ஒத்துக் கொள்ளவில்லை. "அம்பா ஆடல் என்று தைந்நீராடற்குப் பெயராயிற்று, தாயோடாடப் படுதலின்" என்று பரிமேலழகர் எழுதி யிருப்பது காண்க. பரிபாடலில், ஆதிரை நாளில் விழா தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்டிருக்கிறதே தவிர, ஆதிரை நாளில் அம்பா ஆடியதாகக் கூறப் படவில்லை. எனவே, மார்கழி ஆதிரையில் விழா தொடங்கப்பட்டது; அது தைத் திங்கள் வரையிலும் வளர்ந்து கொண்டு போயிற்று; அம்பா ஆடல் தைத் திங்களில் நிகழ்ந்தது-என்று கொள்ளுதலே பொருந்தும். தையில் நிறைவேறும் தவ நோன்புக்கு மார்கழியி லேயே தொடக்க விழா-முன்னாயத்த விழா செய்யப் படுவதாக நாம் முன்பு எழுதியுள்ள கருத்துக்கு, பரிபாடலில் உள்ள 'ஆதிரை விழவு தொடங்க' என்னும் பகுதியும் துணை புரிகிறதன்றோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/119&oldid=1321692" இலிருந்து மீள்விக்கப்பட்டது