பக்கம்:தைத் திங்கள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132 தைத் திங்கள்


சில குறைபாடுகள் இருப்பதால், அவற்றைத் திருத்திப் புதிய நாள் காட்டி உருவாக்கும் முயற்சியை உலக நாடுகள் நிறுவனம் (ஐ. நா. சபை) மேற் கொண்டுள்ள செய்தி இங்கே குறிப்பிடத்தக்கது. நமது இந்திய அரசு இப்பொழுது புதிதாய் அமைத்திருக்கும்'சக ஆண்டுமுறை' (Saka National Calendar)நாள்காட்டியில், மார்ச்சு 22-ஆம் நாள் புத்தாண்டுப் பிறப்பாக வருவது ஈண்டு எண்ணத்தக்கது.

இந்த அடிப்படையுடன் நோக்குங்கால், சித்திரையை ஒரு சாராரும் ஆவணியை ஒரு சாராரும் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கமாகக் கொண்டிருக்கும் தமிழ் நாட்டில் தைத் திங்களையும் புத்தாண்டுத் தொடக்கமாக ஒரு காலத்தில் ஒரு சாரார் கொண்டதில் கொள்வதில் வியப்பில்லை. அதற்கேற்ற நில இயல்வான இயல் சூழ்நிலையும் தைத் திங்களுக்கு உண்டு என்பது முன்பே விளக்கப்பட்டுள்ளது. அஃதாவது-வட துருவப் பகல்-தேவர் பகல்-ஞாயிற்றின் வட செலவு (உத்தராயணம்) ஆகியவை ஒத்தமைந்துள்ள சூழ்நிலையே அது. மக்களுக்கு ஓர் ஆண்டு எனப்படுவது தேவருக்கு ஒருநாள்,தேவருக்குப் பொழுது விடிந்து பகல் தொடங்குகிற காலம் என்பது, வட துருவத்தில் பகல் தொடங்குகின்ற காலமாகும்; அதுதான் தமிழகத்தில் தைத் திங்கள் தொடங்குகிற காலமும் ஆகும். எனவே, மக்களின் புத்தாண்டுப் பிறப்பு தைத் திங்கள் பிறப்பே என்று கூறுவது எல்லா வகையிலும் பொருத்த முடையதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/149&oldid=1323743" இலிருந்து மீள்விக்கப்பட்டது