இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2
வ.கோ. சண்முகம்
ஆடி விதையாக, ஆவளியின் பின்கன்னிப்
பாடி நடவுசெய் பைம்நாற்றாய், ஐப்பசிமேல்
கூடிவரும் கார்த்திகையிற் கொய்களைகள் தாம்நீங்கி
வாடித் தளராமல் மார்கழியில் தோளுயர்த்திக்
தேதி துடிக்கும் செழும்வையம் காத்ததற்குக்
கோடிப்பொன் முத்தை உமிச் சுவரின் கோட்டைக்குள்
மூடிக் கரந்தே முறுவலிக்கும் நெல்லரசி
நாடியழைக் கின்றாள் நகைத்துவா, தைப்பாவாய்!
கட்டுக் கரும்பு, கனிக்குலங்கள் தெங்கோடு
வெட்டி எடுக்கும் முழு மஞ்சள், இஞ்சியுடன்
நெட்டி வெறும்மலரும் நாள்பூத்தப் பன்மலரும்
தட்டுநிறை கற்கண்டும், தண்ணென்ற வெற்றிலை மேல்
மொட்டுநிகர் பாக்கும் முன்படைத்த மன்றினிலே
வட்டக் கழுத்து, முகம் வர்ணமிட்டப் பூம்பாளை
இட்டதிலே பாலூற்றி ஆக்குநெய்த் தீம்பொங்கல்
இட்டுன்னைக் கூவுகிறோம் ஏற்கவா, தைப்பாவாய்!