பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

கொண்டாற் போன்ற உணர்ச்சியுடன் அந்த எம்பெருமானைச் சேவிக்கின்றோம்.

இராமரிடம் விடை பெற்றுக்கொண்டு பார்த்தசாரதியின் கருவறையை நோக்கிச் செல்லுங்கால் இராமநாமத்தையன்றி வேறொன்றையும் வேண்டாத சிறிய திருவடி நமக்குக் காட்சி தருகின்றார்: அவரை வணங்கிவிட்டு நகருங்கால் ஆழ்வார்கள் நமக்குத் திருமுகங்கள் காட்டி ஆசி கூறுகின்றனர். அவர்கட்கெல்லாம் தனித்தனி கும்பிடு போட்டுவிட்டுக் கருவறையை நோக்கி நடக்கின்றோம். அங்கு கம்பீரமான நீண்டுயர்ந்த தோற்றத்துடன் முறுக்கிய மீசையுடன் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம் கொண்டு சேவை சாதிப்பவரே வேங்கடகிருஷ்ணன். இவரே மூலவர். உற்சவரே பார்த்தசாரதி என்பவர். திருமலையில் எழுந்தருளி யிருக்கும் திருவேங்கட முடையானே சுமதி என்ற தொண்டை மான் சக்கரவர்த்தியின் பிரார்த்தனைக்கிணங்க ‘பார்த்தன் செல்வத் தேர் ஏறு சாரதியாய் எழுந்தருளியுள்ளான் என்பது வரலாறு. எம்பெருமான் தனியாக வரவில்லை. குடும்ப சகிதமாகவே வந்து விடுகின்றார். எழிலெல்லாம் திரண்டு வடிவெடுத்தற்போல் உருக்குமினிப் பிராட்டியார் எம்பெருமான் பக்கத்தில் நின்ற திருக்கோலத்தில் நமக்குச் சேவை சாதிக்கின்றார். பிராட்டிக்குப் பக்கத்தில் ஒரு கையில கலப்பையுடனும் , மற்றொரு கையில் வரதமுத்திரையுடனும் பலராமர் நிற்கின்றார். பெருமாளுக்கு இடப்பக்கமாகத் தம்பி சாத்தகியும், மகன் பிரத்யும்னனும், பேரன் அநிருத்தனும் எழுந்தருளியுள்ளனர். பார்த்தனுக்குத் தேரோட்டியாய் எழுந்த அவசரம் ஆனதால் இடதுகையில் இருக்க வேண்டிய சங்கு வலது கையில் மாறிக் கிடக்கின்றது. போரில் ‘படைஎடேன்’ என்று வாக்குக் கொடுத்ததால் சக்கரப்படை இல்லை. ஆயினும், அவருடைய இடையினின்றும் வாள் ஒன்று தொங்குகின்றது. அது கீதாச்சாரியனாக ஞான யோகத்தை விளக்கும்போது அஞ்ஞானத்தால் எழும் ஐயங்களையெல்லாம் வேருடன் களையும் ஞானவாள்’ என்று விளக்கப் பெறுகின்றது. இவ்விளக் கத்தால் ‘படை எடேன்’ என்ற வாக்கு பொய்க்கவில்லை என்பதை உணர்தல் வேண்டும்.

மூலவருக்கு முன்னால் பெரிய பிராட்டியார், பூமிப் பிராட்டியார் இவர்களுடன் நிற்பவரே பார்த்தசாரதி என்பவர்.