பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 தொண்டை நாட்டுத்திருப்பதிகள்

என்று விகாரப்பட்டது. அஹிந்த்ரன் - திருவனந் தாழ்வான். அவன் வழிபட்ட தலமாதலால் ‘அயிந்திரபுரம்’ என்று வழக்காறு பெற்றது என்பதனையும் அறிகின்றோம்.

எம்பெருமான் உறையும் இருப்பிடத்தை மேலும் நம் மனம் ஆராயத் தொடங்குகின்றது.

‘பின்னும் மாதவிப் பந்தலில் பெடைவரப்

பிணியவிழ் கமலத்து ‘தென்ன என்றுவண் டின்னிசை முரல்தரு

திருவயிந்திர புரமே’

(மாதவி-குருக்கத்தி: பெடை-பெண் அன்னம்; பிணி-கட்டு: கமலம்-தாமரை, முரல்தரு -பாடா நிற்கின்ற)

என்பது ஒரு கோணத்தில் பார்க்கப்பெறும் சூழ்நிலை. ஆண் வண்டுகள் தம்முடைய பெண் வண்டுகளுடன் கூடித் தாமரை மலரின்மீது இருந்துகொண்டு ‘மதுபானம் பண்ணுகின்றன. தம்பதிகட்குள் ஊடல் (பிரணயகலகம்) ஏற்படுகின்றது. பெண் வண்டு ஆண் வண்டை வீட்டு நீங்கிக் குருக்கத்திப் பந்தலில் புகுந்து ஒளிந்து கொள்ளுகின்றது. அதனைப் பிரிந்து ஆற்றமாட்டாத ஆண் வண்டு, தனது துணை வண்டு ஊடல் தீர்ந்து ஓடிவருமாறு தாங்கொணாத தனது சிரம நிலையை வெளியிடுகின்ற இன்னிசைக் பாடல்களைத் தாமரை மலரில் இருந்து கொண்டு பாடுகின்றது. இப்படிப்பட்ட பொழில் வாய்ப்புப் பொருந்தியது இத்திவ்விய தேசம். வண்டானது கிளைகளின் (சாகைகளின்) நுனியிலே திரியுமாப் போலவே வேத சாகையின் நுனியில் (உபநிடதங்களில்) விளங்குகின்ற எம்பெருமான், எம்பிராட்டியுடன் ஊடல் கொண்டு செய்யும் செயல்களைச் சொல்லியதாகக் கொள்வர் வியாக்கியாதாக்கள். ‘பிராட்டியும் தானுமான சேர்த்தியில் ப்ரணய கலகம் மாறாதே செல்லுமாப் போலேயாயிற்று அங்குத்தைத் திர்யக்குகளுடைய யாத்ரையும்’ என்ற இன்சுவை மிக்க பெரிய வாச்சான் பிள்ளையின் அருளிச் செயலில் ஆழங்கால் பட்டு நிற்கின்றோம். இன்னொரு பக்கத்தில் அன்பொடு பொருந்தி வாழும் அன்னப் பறவைகளின் தம்பதிகள் காட்டப்பெறுகின்றன. இவை பெரிய தாமரைப் பூவாகிய படுக்கையில் பொருந்தி வாழ்கின்றன.

14. பெரி. திரு. 3. 1:2. 15. அங்குத்தை - அவ்விடம்; திர்யக்குகள் - விலங்குகள்.