பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோவலூர்த்தீங்கரும்பு 193

பாடல்களின் இன்பச் சாறு பாயப்பெற்று வயல்களிலுள்ள கரும்புகளின் கணுக்கள் வளர்கின்றன. வண்டுகள் பாடும் இசையைக் கேட்டு அஃறிணைப் பொருளாகிய கரும்பும் அசைவற்று நிற்பதாகக் கூறும் பாநயம் எண்ணி எண்ணி அநுபவிக்கத் தக்கது.

இன்னும் நம் கற்பனைச் சிறகுகள் கொண்டு பறக்கக் கூடுமாயின் ஈண்டுத் திருக்கோவலூர் எம்பெருமானையே கரும்பாகக் குறிப்பிட்டதாகவும் கொள்ளலாம். வண்டுகள் வெறும் இன்னொலிகளாக எழுப்பாமல் முதலாழ்வார்களின் பாடல் களையே இன்னொலிகளாக எழுப்பினதாகக் கருதலாம். அமுதுறும் அப்பாடல்களின் இன்பப் பெருக்கில் திளைக்கும் ‘திருக்கோவலூர்த் தீங்கரும்பு’ (எம்பெருமான்) கண் வளர்கின்றதாகவும் கொள்ளலாம். இங்ஙனம் அவரவர்களுடைய பக்திக்கேற்றவாறு கற்பனையும் வளரும்; அதில் கவிதைய நுபவத்துடன் பக்தியநுபவமும் கலந்து ஊற்றெடுத்து நம்மைப் பேரின்பக்கடலில் கொண்டு செலுத்தும். பக்தியநுபவத்தின் கொடுமுடியைக் கண்ட திருமங்கையாழ்வார் திருக்கோவலூார்த் திரிவிக்கிரமனை இங்ஙனம் எல்லாம் சிந்தித்து அநுபவித்திருக்க வேண்டும் என்று கருதுவதில் தவறில்லையல்லவா? மூன்று ஆழ்வார்களைக் கரும்பினைப் பிழியும் மூன்று ஆலை உருளைகளாவும், அவர்களால் நெருக்குண்ட எம்பெருமானை நெருக்குண்ட இடமாகிய திருக்கோவலூர் அருகில் விளையும் கரும்பாகவும், அந்த எம்பெருமானின் செளலப்பிய குணத்தைச் சாறாகவும் வேதாந்த தேசிகர் குறிப்பிட்டுள்ளமை ஈண்டு நினைவு கூர்ந்து மகிழத் தக்கது. மேற்குறிப்பிட்ட ஆழ்வாரின் பாசுரமே இச்சுலோகத் திற்கு அடிப்படையாக அமைந்திருக்க வேண்டும்.

திருக்கோவலூரைச் சுற்றியுள்ள சோலைகளில் ஏராளமான கமுக மரங்கள் காட்சியளிக்கின்றன. கமுக மரத்தின் நிறமோ கறுப்பு; அவற்றின் பாளைகளின் நிறமோ பச்சை; அவை வெடித்து வெளிப்படுத்தும் பாக்குப் பிஞ்சுகள் வெண்ணிற முத்துக்களையொத்துள்ளன; முற்றின பச்சைநிறப் பாக்குக் காய்கள் மரகதம் போல் பொலிவுற்றுத் திகழ்கின்றன; பழுத்த

7. தேஹளிசஸ்துதி - சுலோகம் - 7.

தொ.நா-13