பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கச்சிக் கார்மேனி அருளாளர்

5

கொண்டு சேவை சாதிக்கின்றார். இவரே இத்திருக்கோயிலில் முதன் முதலாக எழுந்தருளச் செய்யப்பெற்றவர் என்பது புராண வரலாறு. இவரே பூதத்தாழ்வாரால்,

“என்நெஞ்சு மேயான்என்
       சென்னியான் தானவனை
வன் நெஞ்சம் கீண்ட
       மணிவண்ணன்”[1]

(மேயான்-பொந்தியிருப்பவன்; சென்னி யான்-தலையில் இருப்பவன்; தானவன்.அகரனாகிய இரணியன்; வல்நெஞ்சும்-வலியமார்பு; கீண்டகிழித்த.)

என்று போற்றப் பெற்ற எம்பெருமான் என்பது பலரது கொள்கை. விசிட்டாத்வைத தத்துவக் கருத்து அடங்கிய இச்சொற்றொடரைக் கொண்டே இவரைச் சேவித்து வலம் வந்து கீழ்ப் பிராகாரத்திற்கு வருகின்றோம். அங்கிருந்து சில படிகள் ஏறி ஒரு சிறு மண்டபத்தை அடைகின்றோம்.

இந்தச் சிறு மண்டபத்திலிருந்து இருபத்து நான்கு படிகளை ஏறிக் கடந்து அத்திகிரியை அடைகின்றோம். இந்தப் படிகளில் ஏறிச் செல்லுங்கால் எம்பெருமான் இவ்வுலகைப் படைத்த இருபத்து நான்கு தத்துவங்கள் நம் சிந்தையில் எழுகின்றன. அவற்றைச் சிந்திக்கின்றோம்.[2] அத்திகிரி’ என்ற பெயர் ஏற்பட்ட புராண வரலாறுகள் நம் சிந்தையில் குமிழியிட்டு எழுகின்றன. பண்டு இந்தத் தலத்தில் திக்கு யானைகள் வந்து எம்பெருமானை ஆராதித்தமையினால் அதுபற்றி ‘ஹஸ்திகிரி’[3] (அத்திகிரி) என்று திருநாமம் ஏற்பட்டதாகக் கூறுவர் ஒரு சாரார். இந்திரனது யானையாகிய ஐராவதம் நெடுநாள் தவம் செய்து மலைவடிவம் கொண்டு எம்பெருமானைத் தாங்கிக் கொண்டிருப்பதால் இப்பெயர் ஏற்பட்டதாகப் பிறிதொரு சாரார் மொழிவர். கஜேந்திராழ்வான் பூசித்துப் பேறு பெற்ற தலமாதலால்

  1. இரண். திருவந்-95.
  2. தன் மாத்திரைகள் 5; ஞானேந்திரியங்கள் 5; கருமேந்திரியங்கள் 5 ; பூதங்கள் 5 ; ஆக இவை 20. இவற்றுடன் பிரகிருதி 1. மகான் 1, அகங்காரம் 1, மன்ஸ் 1, ஆக நான்கும் சேர 24 தத்துவங்களாகின்றன. இவற்றுடன் புருடன் (சீவான்மா) 1 மகாபுருடன் (பரமான்மா) 1 சேர்ந்து வைணவதத்துவம் 26 ஆகின்றது.
  3. ஹஸ்தி-யானை; கிரி-மலை. ‘ஹஸ்தி கிரி’ தமிழில் ‘அத்திகிரி’ என்றாயிற்று.