பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

தொண்டைநாட்டுத் திருப்பதிகள்

ஏகுவாயாயின், யானும் இவண் இருக்கப் போவதில்லை’ என்று மறுமொழி கூறினார். பிறகு திருவெஃகாவிற்குச் சென்று அங்குக் கோயில் கொண்டிருக்கும் எம்பெருமானை நோக்கி,

கணிகண்னன் போகின்றன்; காமருபூங் கச்சி
மணிவண்ணா! நீகிடக்க வேண்டா!-துணிவுடைய
செந்தாப் புலவனும் செல்கின்றேன்; நீயும்உன்தன்
பைந்தநாகப் பாய்சுருட்டிக் கொள்

(காமருபூங் கச்சி-அழகு மிக்க காஞ்சி, பைந்நாகம்-படத்தையுடைய பாம்பு)

என்று பாசுரமிட்டு விட்டுச் சீடனைப் பின் தொடர்ந்தார்.

பக்தரின் வேண்டுகோளுக்கிரங்கி ‘உறங்குவான் போல் யோகு செய்யும் பெருமானும்’ உடனே படுக்கையைச் சுருட்டிக் கொண்டு பெரிய பிராட்டியாருடன் ஆழ்வாரைப் பின் தொடர்ந்து பயணமானாராம். முன்னே சீடன், பின்னே குருநாதர், இறுதியாகப் பெருமாள் இப்படி இவர்கள் மூவரும் போவதைக் கண்டு பக்த கோடிகளும் சாது சனங்களும் இவர்களைத் தொடர்ந்து சென்றனர். இராமனைப் பிரிந்த அயோத்தி போலாகிவிட்டது காஞ்சிமா நகரம்! இதனைக் கண்ட பல்லவவேந்தன் தன் மதியீனத்திற்குக் கழிவிரக்கம் கொண்டு, கணிகண்ணனைத் தேடி சென்று நகர் திரும்புமாறு வேண்டினான். கணிகண்ணனும் ஆழ்வாரின் இசைவினை நாடினான். ஆழ்வாரும் பெருமாளை நோக்கி,

“கணிகண்ணன் போக்கொழிந்தான்; காமருபூங் கச்சி
மணிவண்ணா! நீகிடக்க வேண்டும்;-துணிவுடைய
செந்தாப் புலவனும் செலவொழிந்தேன்; நீயும்உன்தன்
பைந்தநாகப் பாய்படுத்துக் கொள்”

என்று முன்பு பாடிய பாசுரத்தையே மாற்றிப் பாடினார். எம்பெருமானும், பக்த கோடிகளும், பிறரும் ஊர் திரும்பினர். பொலிவிழந்த நகரமும் முன்போல் ‘நிறைந்தசீர் நீள்கச்சி'யாகப் பொலிவுற்றது. தாம் சொன்னவாறு செய்த எம்பெருமானுக்கு ஆழ்வார் ‘சொன்ன வண்ணம் செய்த பெருமாள்’ என்று புதிய திருநாமம் சூட்டினார். இந்த வரலாறு ‘குரு பரம்பராப் பிரபாவம்’ என்ற நூலில் உள்ளது. இந்த வரலாற்றைச் சிந்தித்த வண்ணம் பேருந்தை விட்டு இறங்கிக் திருக்கோயிலை நோக்கி வருகின்றோம்.