பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

தொண்டை நாட்டுத் திருப்பதிகள்

வெப்பக் கதிர்களால் பூமியிலுள்ள நீரைக் கவர்கின்றான் என்பது ‘நால் நிலம் வாய்க் கொண்டு நன்னிர் அற மென்று” என்ற சொற்றொடரால் அறியப்பெறும் செய்தி. நால்வகை நிலத் துள்ளும் பாலை சத்தற்ற நிலம் என்பதும், இன்பத்திற்கன்றிப் பிரிதல் துன்பத்திற்கு உரியதாகின்ற இதன் கொடுமை ‘கோதுகொண்ட’, ‘மென்று சுவைத்து உமிழ்’ என்ற தொடர்களால் குறிக்கப் பெற்றுள்ள நயத்தை நினைக்கின்றோம். பாலை நிலத்திற்கு உரிய பெரும்பொழுது இளவேனில், முதுவேனில் என்பதையும், சிறுபொழுது நண்பகல் என்ப தையும் நாம் அறிவோம். பாலைக்குத் தெய்வம் கொற்றவை என்று இலக்கண நூல் கூறினும் ஈண்டு ஆழ்வார் அதன் தெய்வம் சூரியன் என்பதாகவே ("வேனில் அம் செல்வன்') காட்டு கின்றார். இயல்பாகவே வெப்பக் கதிர்களையுடைய பகலவனும் வெறுத்தொதுக்கும்படியாக உள்ளது பாலையின் கொடுமை என்பது தோன்ற வேனிலம் செல்வன் சுவைத்து உமிழ் பாலை” என்று கூறப் பெற்றுள்ளநயத்தினைச் சுவைக்கின்றோம். நன்னிர் அறமென்று’, ‘கோது கொண்ட’ என்று கூறிய பின்னையும் “சுவைத்து’ என்றது, சிறிதும் நீரில்லாதபடி பசையறப் பருகினமை தோன்றுவதற்காகும்.

இப்படிப்பட்ட கொடிய அந்த நிலத்தைக் காலால் நடந்து கடந்து வந்து மிக வருந்த வேண்டிய நிலையிலும் தலைவனைப் பிரியாது அவனுடன் வருதலையே ஒர் இன்பமாகக் கருதி வருகின்ற தலைவியை ‘பாலை கடந்த பொன்னே!’ என்று குறிப்பிடுகின்றான் தலைவன். பொற் கொல்லன் எரிகின்ற நெருப்பில் உருக்கின பொன்னை ஒட விடுங்கால் அது ஒளிவிடுவது போல, துன்பத்திலும் இன்பத்தைக் காணும் இவளது முகமலர்ச்சியை காட்டும் பொருள் பொதிந்த இச்சொற்றொடரினை எண்ணி எண்ணி மகிழ்கின்றோம். இங்ஙனம் பாட்டின் பொருளில் ஈடுபட்ட வண்ணம் ‘கால் நிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெஃகாவை’ நோக்கி நடந்து வந்து கொண்டிருக்கின்றோம். தேவர்கட்கு இந்நில உலகில் கால் தோயாமை இயல்பு. உம்பர் உலகினும் பெருமையையுடைய இத்திவ்விய தேசத்தில் அவர்களும் அந்த இயல்பு மாறிக் கால் நிலம் தோய்ந்து நடப்பர். நிலத்தில் கால் தோய்பவரான மண்ணுலகத்தோரும் கால் பொருந்துவதற்கு அரிய பாலையின் வெப்பத்தைத் தணிக்க வல்லது திருவெஃகா. அத்திவ்வியதேசம் விண்ணுள்ளோரையும் கால் நிலம் தோய்ந்து நடக்கும்படியாகச்