பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

தொண்டைநாட்டுத் திருப்பதிகள்

இங்ஙனம் ஆழ்வார்கள் பாசுரங்களில் ஆழங்கால் பட்டிருக்கும்பொழுது திவ்விய கவியின் திருப்பாசுரமும் நம் நினைவிற்கு வருகின்றது.

“தவம்புரிந்த சேதநரை சந்திரன் ஆதித்தன்
சிவன்பிரமன் இந்திர னாச்செய்கை-உவந்து
திருப்பா டகம்மருவும் செங்கண்மால் தன்மார்பு
இருப்பாள் தகவுரை யாலே.”[1]

{சேதநர்-ஆன்மாக்கள்; செய்கை-செய்வது; ஆ-ஆக; உவந்து-மகிழ்ந்து; மருவும்-பொருந்தியிருக்கும்; மார்பு இருப்பாள்-பெரிய பிராட்டியார்)

என்ற பாசுரத்தையும் ஒதிப் பெரிய பிராட்டியாரின் புருஷகார தத்துவத்தைச்[2] சிந்திக்கின்றோம். இங்ஙனம் சிந்திக்குங்கால்,

“இவள் தாயாய், இவர்கள் கிலேசம்
பொறுக்கமாட்டாதே அவனுக்குப் பத்தினியாய்,
இனிய விஷயமாயிருக்கையாலே கண்ணழிவற்ற
புருஷகாரம்.”[3]

என்ற முமுட்சுப்படியின் வாக்கியம் நம் மனத்தில் குமிழியிட் டெழுகின்றது. இந்நிலையில்,

“சம்ஸ்லேஷ தசையில் ஈஸ்வரனைத் திருத்த்தும்;
விஸ்லேஷ தசையில் சேதநனைத் திருத்தும்.”

“இருவரையும் திருத்துவது உபதேசத்தாலே”

“உபதேசத்தாலே மீளாதபோது சேதநனை
அருளாலே திருத்தும்; ஈஸ்வரனை
அழகாலே திருத்தும்.” [4]

(சம்ஸ்லேஷம்-சேர்க்கை; விஸ்லேஷம்-பிரிவு)

என்ற ஸ்ரீவசன பூஷணத்தின் வாக்கியங்களையும் நினைக்கின்றோம். இங்ஙனம் தத்துவத்தில் ஆழங்கால்பட்ட வண்ணம் தீர்த்தம் திருத்துழாய் பெற்றுத் திருக்கோயிலை விட்டு வெளிவருகின்றோம்.

  1. நூற். திருப். அந்-78
  2. புருஷகாரம் - சேர்ப்பிக்கும் தன்மை; பரிந்துரை.
  3. முமுட்சு - 128.
  4. ஸ்ரீவச. பூஷ-11,12, 14