பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

தொண்டைநாட்டுத் திருப்பதிகள்

இதில் பார்த்தன் பரந்தாமனது திருவடிகளிலிட்டு அருச்சித்த மலர்கள் சிவபிரானது திருமுடிமேல் இருத்தலைக் கண்டபிறகும் திருமாலே பரம்பொருள் என்ற உறுதியான உணர்ச்சியைக் கொள்ளாது தடுமாறும் உலகோரின் பேதைமையைக்கண்டு இரங்கிக் கூறுகின்றார் கவிஞர். இப்பாசுரத்திற்கு மூலமாகவுள்ள நம்மாழ்வாரின் பாசுரமும் ‘பளீச்சென’ நம் நினைவிற்கு வர அதனையும் ஒதுகின்றோம்.

தீர்த்தன் உலகுஅளந்த
        சேவடிமேல் பூந்தாமம்
சேர்த்தி அவையே
        சிவன்முடிமேல் தான்கண்டு
பார்த்தன் தெளிந்தொழிந்த
        பைந்துழா யான்பெருமை
பேர்த்தும் ஒருவரால்
        பேசக் கிடந்ததே?[1]

(தீர்த்தன்-பரிசுத்தனான இறைவன்; சேவடி-சிவந்த திருவடி, பூந்தாழம்-பூமாலை; பார்த்தான் - அருச்சுனன்: பைந்துழாயான்-திருமால்; பேர்த்தும் - மீண்டும்)

என்ற பாசுரத்தில் கண்டவாறு இவ்வரலாற்றில் நம்மாழ்வார் ஈடுபட்டவாறு நாமும் ஈடுபடுகின்றோம். இந்த எண்ணத்துடன் மனநிறைவு பெற்றுத் திரும்புகின்றோம்.

இந்த எம்பெருமானுக்கு ஒரு சைவரே கைங்கரியம் செய்து வருகின்றார்.

திருக்கள்வனூர் : இந்தத் திவ்வியதேசம் காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோயிலினுள் உள்ளது. பலரை வினவியும் ஒருவருக்கும் இந்த எம்பெருமான் - கள்வன் - எழுந்தருளியிருக்கும் இடம் சரியாகத் தெரியவில்லை. காமாட்சி அம்மன் கோயிலினுள் இருக்கும் உட்கோயில்களும் சந்நிதிகளும் திக்குத்தெரியாதபடி அமைந்து கிடப்பதால் தேடிக் காண்பதில் மேலும் சங்கடம் அதிகமாகின்றது. குற்ற விசாரணைத்துறை (C.I.D.) அலுவலர்போல் ஒருவாறு விசாரித்துக் கொண்டு தேடியதில் இவர் திருக்கோயிலினுள் அர்த்தமண்டபத்தின் நுழைவாயிலின் இடப்புறச் சுவரிலுள்ள மாடம் ஒன்றில் எங்கோ திருடிவிட்டு

  1. திருவாய் - 2.8:6