பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 இன்னும் இக்காமத்தைப் பருவம் கருதி மூன்றாகப் பிரித்தலும் உண்டு. காமக் குறிப்பிற்கு ஒவ்வாத இளமைப் பருவம் வாய்ந்த ஒருவன் ஒருத்தியை மற்றவர் விரும்பிக் கூறுவது ஒருபாற்காமமென்றும், காமக்குறிப்பிற்கு ஒத்த பருவமுடைய இருவர்தம் கூட்டம் ஒத்த காமமென்றும், காமக்குறிப்பிற்கு ஒவ்வாத முதிர்ந்த பருவத்தினரின் கூட்டம் பொருந்தாக் காமம் என்றும் வழங்கப்படுதலும் உண்டு. இவையும் முறையே கைக்கிளை, ஐந்திணை, பெருந்திணை என்ற பெயரால் வழங்கும். இன்னும் சிறிய அளவுள்ள காமத்தைக் கைக்கிளை என்றும் ஒத்த அளவுள்ள காமத்தை ஐந்திணை என்றும் அளவிற்கு மேற்பட்ட மிக்க காமத்து மிகல் முதலியவற்றைப் பொருந்தாக் காமமென்றும் வழங்குவதுண்டு. கைக்கிளை என்ற சொற்குச் சிறுமை பற்றிய உறவு என்று பொருள் காண்பர் இளம்பூரணர். 'கை' என்பது சிறுமை என்று பொருள்படும் தத்தம் குறிப்பிற் பொருள் செய்வதோர் இடைச்சொல் என்றும், கிளை என்பது உறவென்றும், பெருமையில்லாத தலைமக்கள் உறவே கைக்கிளை என்று கூறப்படும் என்றும், இது ஒருபாற்காமம் என ஒரு மருங்கு பற்றிய கேண்மை எனப் பெயர் பெறுமென்றும் அவர் கூறுவர். ஐந்திணை என்ற சொற்கு ஐந்து ஒழுக்கமாகப் பிரிக்கப்பட்டு வழங்கும் ஒத்த காமம் என்று பொருள் கூறுவர். இதற்கு அன்புடைக்காமம் என்றும் நடுவண் ஐந்திணை என்னும் பெயர் உண்டு. இந்த ஐந்திணை "சுவைபட நிகழ்வனவெல்லாம் ஓரிடத்து நிகழ்வனவாகத் தொகுத்து ஐந்திணைக்கு நிலமும் காலமும் ஆகிய முதற்பொருளும் தெய்வம் உணா முதலிய கருப்பொருளும் அடுத்துப் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் எனச் சொல்லப்பட்ட அவ்வுரிப்பொருள், ஒத்த அன்பும் ஒத்த குலமும் ஒத்த வடிவும் ஒத்த குணமும் ஒத்த செல்வமும் ஒத்த இளமையும் உளவழி நிகழுமாதலின் அது