பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 அவையும் அன்புடையார் பலர் கூடி நிகழ்த்துபவை யாதலின் அன்பொடு புணர்ந்தவையாம், அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை (திருக்குறள் - 72) என்பதனாலும் கொள்க. இனி இவ்வைந்திணை இன்பம் மட்டும் ஆகாமல் இன்பமும் பொருளும் அறமும் ஆயினவாறு என்னை எனின்? புணர்தல் முதலாகிய ஐந்து பொருளும் இன்பந் தருதலின் இன்பமாயின. முல்லை முதலாகிய ஐந்திணைக்கும் உறுப்பாகிய நிலமும் காலமும் கருப்பொருளும், இவற்றின் புறமாகிய வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை என்பனவும் வாகையின் ஒரு கூறும் பொருளாதலாகும். புணர்தல் முதலாகிய உரிப்பொருளால் வருவதோர் கேடின்மையாலும் பொருளாயின. இவ்வொழுக்கங்கள் அறத்தின் வழி நிகழ்வதாலும், பாலையில் புறமாகிய வாகைப்படலத்துள் அறநிலை கூறுதலாலும் இவை அறமாயின" என்பர்.