பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 நடுவண் ஐந்தினையாகிய ஒத்த காமத்தின் மிக்கும் குறைந்தும் வரும் ஒவ்வாக் கூட்டமாகும். தலைமகன் முதியனாகித் தலைமகன் இளமையாதலும், இவ்விருவரும் இளமைப் பருவம் நீங்கியவழி அறத்தின் மேல் மனம் நிகழ்தலன்றிக் காமத்தின் மேல் மனம் நிகழ்தலும், தேறுதலொழிந்த காமமும், மிக்க காமத்தின் மிடலும் ஆகிய இவையெல்லாம் பெருந்தினைப் பாற்படும். அவற்றுள் ஐந்திணை என்பது, நிலமும் காலமும் கருப்பொருளும் அடுத்துப் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என உரிப்பொருள் வகையால் ஐந்தாகி, முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் எனப் பெயர்பெற்று நிற்கும். இவ்வேழும் அகத்திணைப் பொருளாம். அகத்தினைப் பொருளை நன்கு ஆராய்ந்து தெரிந்து கொண்டு புறத்திணையைக் காணப் புகுந்தால் அங்கே குறிஞ்சித்திணையின் புறமே மாற்றாரது ஆநிரை கொள்ளும் வெட்சித்திணை. முல்லைத்திணையின் புறமே மாற்றார் மண்கொள்ளும் வஞ்சித்திணை. மருதத் திணையின் புறமே மாற்றார்தம் மதிலைப்பற்றும் உழிஞைத்திணை. நெய்தல் திணையின் புறமே இரண்டு பேரரசரும் மைந்தினைக் கருதிப் போர்புரியும் தும்பைத்திணை. பாலைத் திணையின் புறமே அரசனுடைய வெற்றியையும் ஏனைய மக்களின் தொழில் வெற்றியையும் குறிக்கின்ற வாகைத்திணையாகும். பெருந்திணையின் புறமே உலகமக்களின் பல்வேறு நிலை யாமையைக் கூறும் காஞ்சித் திணையாகும். கைக்கிளையின் புறமே புகழ்ச்சி முதலானவற்றைக் கூறுகின்ற பாடாண் திணையாகும். இவ்வாறு தொல்காப்பியர் கூறும் கருத்தினை ஆராய்ந் தால் காமம் என்ற ஒன்றிலிருந்தே பலவகை அகப்பொருளும், புறப்பொருளும் தோன்றுகின்றன என்பது தொல்காப்பியர் கருத்தால் அறியப்படும்.இப்பொருளெல்லாம் செய்யுட்குரிய பொருள்களே ஆகும்.