பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175 சார்பெழுத்து தொல்காப்பியர் கூறும் சார்பெழுத்து குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்ற மூன்றாகும். சார்பல்லாத எழுத்தினை நூன்மரபிலும் சார்பெழுத்தினை மொழி மரபிலும் கூறியுள்ளார். இன்னும் நூல்மரபில் சார்பல்லாத உயிரெழுத்துள் அ, இ, உ மூன்றும் சுட்டென்றும் ஆ, ஏ, ஓ அம்மூன்றும் வினாவென்றும் கூறுகிறார். மொழி மரபில் அகர இகரம் ஐகாரமாகும் என்பது முதலான நூற்பாக்களால் கூறப்படுவனவற்றை உரை யாசிரியர்கள் எழுத்துப்போலி என்பர். மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்களை மொழி முதலெழுத்தென்றும் ஈற்றில் வரும் எழுத்துக்களை ஈற்றெழுத்தென்றும் கூறுவர். உந்தி முதலா முந்து வளியால் எழுத்துக்கள் தோன்றும் என்பர் தொல்காப்பியர். நன்னூலாசிரியர் உயிர் முயற்சியால் உள்வளி துரப்ப எழும் பரமானுக்களால் தோன்றும் ஒலியே எழுத்தென்பர். நன்னூலார் கூறும் எழுத்து பவணந்தியார் எழுத்தாகிய அது முதலெழுத்தென்றும் சார்பெழுத்தென்றும் இருவகை என்பர். முதலெழுத்து உயிரெழுத்தென்றும் மெய்யெழுத்தென்றும் இரண்டு பிரிவினதாகும். உயிரெழுத்து அகர முதற் பன்னிரண்டாம். மெய்யெழுத்து ககரம் முதல் பதினெட்டாம் என்றும் உயிரெழுத்துள் அ, இ, உ, எ, ஒ ஐந்தும் குற்றெழுத்தாம் என்றும் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள ஏழும் நெடில் எழுத்தாம் என்றும் அ, இ, உ சுட்டெழுத்தென்றும் ஏ, யா முதலும் ஆ ஓ ஈற்றும் ஏ இருவழியும் வினா ஆகும் என்றும் கூறுவர். மெய் பதினெட்டுள் கசடதபற ஆறும் வல்லின மென்றும் ங்ளுணநமன ஆறும் மெல்லினமென்றும் யரலவழள ஆறும் இடையினமென்றும் பெயர் பெறும் என்பர்.