பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197 மனத்தினால் அறிவது ஐம்புலனால் அறிந்தவற்றுள் இதுபோல்வன வேண்டுமெனவும் இது செயல் வேண்டுமெனவும் இஃது எத்தன்மைத்து எனவும் அனு மானித்தறிதல் என்பர். ஒன்றனோடு ஒன்றை ஒப்பிட்டறிதலும் மன அறிவின்பாற்பட்டவையாகும். திருவள்ளுவரும் ஐம்புலனால் உணர்ச்சி ஆகும் என்று கூறாமல், மனத்தான்.ஆம் மாந்தர்க்குணர்ச்சி என்றே கூறுகின்றார். தொல்காப்பியர் உத்திவகையைக் கூறுகின்ற நூற் பாவில், உத்திவகையையெல்லாம் கூறிமுடித்தபின்,"மனத்தின் எண்ணி அறத் தெரிந்து கொண்டு, இனத்திற் சேர்த்தி உணர்த்தல் வேண்டும்" என்று கூறுகின்றார். எனவே, எண்ணுதலும் தெரிதலும் உணருகின்ற மனத்தில் செயலா கின்றன. மேலும் அவர் "புலன் நன்கு உணர்ந்த புலமையோர்" (அகத்திணையியல் - 14) என்றும், "நேரிதின் உணர்ந்தோர்" என்றும், "நுண்ணிதின் உணர்ந்தோர் கண்டவாறு" என்றும் கூறுதலைக் கருதினால் ஒன்றை நன்றாக உணர்தலும் முறையாக உணர்தலும், நுணுகி உணர்தலும் ஆகிய இவையெல்லாம் உணரும் முறையினை உணர்த்துவதாகக் கொள்ளவேண்டும். உத்திவகையுள் உய்த்துணர்தல், அல்லது உய்த்துக் கொண்டுணர்தல் என்பது ஒன்று. அது புலவன் கூறிய பொருள் தெளிவாக விள்ங்காதபொழுது அப்பொருளை அறிதற்கு வேண்டிய நெறிகளிலெல்லாம் அறிவைச் செலுத்தி உணரும் முறையாகும். புலவர்கட்கு உய்த்துணர்வு வேண்டும் என்பதை, எத்துணைய வாயினும் கல்வி இடமறிந்து உய்த்துணர்வு இல்லெனின் இல்லாகும் என்று குமரகுருபரர் கூறுதலைக் காண்க. இந்த உய்த்துணர்வு பலரிடத்தில் இருப்பதில்லை. பரிமேலழகரிடத்தில் அந்த உய்த்துணர்வு இருந்ததாக அறிஞ ரொருவர் கூறுகின்றார்.