பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 புறத்திணை இலக்கணத்தைக் கூறுபடக் கூறுகின்றேன் என்று கூறுகின்றார்.அவர் அறிவுரையின் படி அகத்திணை ஏழினைப்பற்றி விளக்கம் தெரிந்து கொண்ட பின்னரே புறத்தினைச் செய்தியைப் பற்றிப் படிக்கவேண்டும் என்பதை உணர்கிறோம். அவர் அகத்தினை ஏழுள் குறிஞ்சி என்னும் திணை யிலிருந்து பகைவர் ஆநிரையைக் கவருதலாகிய வெட்சிப் போரும், முல்லைத் திணையிலிருந்து பகைவர்தம் நாட்டினைக் கவர்தலாகிய வஞ்சிப்போரும், மருதத் திணையிலிருந்து பகைவர்தம் வாழிடத்தைப் பற்றி அவரை அழித்தலாகிய உழிஞைப் போரும், நெய்தல் திணையிலிருந்து மைந்து கருதி இருவரும் களம் குறித்துப் போர் செய்தலாகிய தும்பைப் போரும், பாலைத் திணையிலிருந்து அரசன் வெற்றியையும் உலக மக்கள் எல்லோருடைய தொழில் வெற்றியையும் குறிக்கும் வாகைத் திணை துறையும் ஒவ்வாக் காமமாகிய பெருந்திணையிலிருந்து நிலை யாமையைப் பற்றிக் கூறும் காஞ்சித் திணையும் ஒருதலைக் காமமாகிய கைக்கிளையிலிருந்து ஒருவரைப் புகழ்ந்து கூறிப் பரிசில் பெறும் பாடாண் திணையும் தோன்றின என்று கூறுகிறார். இவர் கூறுகின்ற புறத்திணை உரிப்பொருள்கள் எல்லா நாட்டு மக்களுக்கும் பொருந்துகின்றனவா என்பதை ஆராய்வோம். எந்த நாட்டிலும் ஓர் நிகழ்ச்சியான சில செயல்கள் நிகழ்வதைப் பார்க்கிறோம், எல்லையைக் கடந்து அங்குள்ள பொருள்களைக் கவர்தலும், அங்குள்ள வர்களுக்குத் துன்பம் செய்தலும் போன்ற செயல்களைச் செய்வதைப் பார்க்கிறோம். இவை மறைவாயியங்கிச் செய்யப்படும். இப்போர் முன் நிகழ்ச்சியைத்தான் தொல் காப்பியர் ஆநிரை கவர்தலென்று கூறி, அதற்கு வெட்சி யென்று பெயர் சூட்டி, அது குறிஞ்சியின் புறத்ததாய் வரும் என்று கூறுகிறார். பின்னர் போர் தொடங்கின் பகைவ னுடைய நாட்டினைக் (மண்ணினை) கவர்தற்காகவும், அவ னுடைய நகரை வளைத்து அவனைக் கொல்வதற்காகவும் அது நிகழும்.